ஈரோட்டில் லாரி கவிழ்ந்து டிரைவர் சாவு


ஈரோட்டில் லாரி கவிழ்ந்து டிரைவர் சாவு
x
தினத்தந்தி 7 Feb 2019 10:15 PM GMT (Updated: 2019-02-07T22:51:26+05:30)

ஈரோட்டில் லாரி கவிழ்ந்து டிரைவர் இறந்தார்.

ஈரோடு, 

பெரம்பலூரில் இருந்து ஈரோட்டிற்கு மக்காச்சோளம் பாரம் ஏற்றிக்கொண்டு நேற்று முன்தினம் லாரி ஒன்று வந்து கொண்டு இருந்தது. அந்த லாரியை நாமக்கல் மாவட்டம் குமரிபாளையம் ஊனங்கல்பட்டியை சேர்ந்த செல்வராஜ் (வயது 45) என்பவர் ஓட்டினார். ஈரோடு சோலாரை கடந்து இரவு 11 மணிஅளவில் லாரி வந்துகொண்டு இருந்தது.

வெண்டிபாளையம் பிரிவு பகுதியில் உள்ள ஒரு வளைவில் லாரியை டிரைவர் செல்வராஜ் திருப்ப முயன்றார். அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, ரவுண்டானா தடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரியின் இடிபாடுகளுக்கு இடையே உடல் நசுங்கி செல்வராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இடிபாடுகளுக்கு இடையே சிக்கி இருந்த செல்வராஜின் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர் இதுபற்றி அறிந்ததும் ஈரோடு தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, செல்வராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

லாரி கவிழ்ந்த விபத்தினால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு கிரேன் வரவழைக்கப்பட்டு லாரியும், மக்காச்சோள மூட்டைகளும் அப்புறப்படுத்தப்பட்டன. இதையடுத்து அங்கு போக்குவரத்து சீரானது.

Next Story