காதல் மனைவியின் நடத்தையில் சந்தேகம்: ரிக் வண்டி டிரைவர் தற்கொலை


காதல் மனைவியின் நடத்தையில் சந்தேகம்: ரிக் வண்டி டிரைவர் தற்கொலை
x
தினத்தந்தி 7 Feb 2019 10:00 PM GMT (Updated: 2019-02-07T23:01:42+05:30)

ஆத்தூர் அருகே காதல் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, ரிக் வண்டி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆத்தூர், 

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள சீலியம்பட்டி தெற்குகாடு பகுதியை சேர்ந்தவர் செல்லக்கண்ணு. இவருடைய மகன் செல்வராஜ் (வயது 29). ரிக் வண்டி டிரைவர். இவருடைய மனைவி தீபா (24). கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு செல்வராஜ், தீபாவை ஒரு கோவில் விழாவில் சந்தித்தார். இதில் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறி அவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.

மேலும், செல்வராஜ் ஆழ்துளை கிணறு அமைக்க ரிக் வண்டியுடன் சென்றால் திரும்பி வருவதற்கு மாதக் கணக்கில் ஆகும் என தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு தீபாவுக்கு குழந்தை பிறந்துள்ளது. பிரசவத்துக்காக தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றிருந்த தீபா அங்கேயே தனது குழந்தையுடன் வசித்து வந்தார்.

வருகிற 10-ந் தேதி செல்வராஜின் தங்கைக்கு திருமணம் நடைபெற உள்ளது. இதையடுத்து, ஆழ்துளை கிணறு அமைக்க சென்ற செல்வராஜ் வீடு திரும்பினார். தங்கையின் திருமணத்தை முன்னிட்டு அவர், தீபாவின் பெற்றோர் வீட்டுக்கு சென்று மனைவி மற்றும் குழந்தையை அழைத்துக்கொண்டு, தனது வீட்டுக்கு வந்தார்.

இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு செல்வராஜ், தனது மனைவியை ஆசைக்கு இணங்க அழைத்துள்ளார். அதற்கு தீபா மறுத்துள்ளதுடன், வேறு அறைக்கு சென்று தூங்கி விட்டார். இதன் காரணமாக மனைவியின் நடத்தையில், அவருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மேலும் தங்கையின் திருமண செலவுக்கு பணம் இல்லாமலும் சிரமப்பட்டுள்ளார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நேற்று காலை கணவர் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தீபா மற்றும் செல்வராஜின் பெற்றோர் கதறி அழுதனர். இது குறித்து மல்லியகரை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து செல்வராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராமன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள். செல்வராஜ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதால், அவரது தங்கைக்கு திருமணத்தையொட்டி நேற்று நடக்க இருந்த நலுங்கு நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது. திருமணம் வருகிற 10-ந் தேதி நடைபெறும் என உறவினர்கள் தெரிவித்ததாக போலீசார் கூறினார்கள். தங்கைக்கு திருமணம் நடக்க இருந்த நிலையில், அண்ணன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story