மார்க்கண்டேய நதியை கடப்பதில் தொடர்ந்து சிக்கல்: 5 நாட்களாக ஒரே இடத்தில் இருக்கும் பெருமாள் சிலை
மார்க்கண்டேய நதியை கடப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் பெங்களூருவுக்கு பெருமாள் சிலை கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பெருமாள் சிலையுடன் லாரி கடந்த 5 நாட்களாக ஒரே இடத்தில் நிற்கிறது.
குருபரப்பள்ளி,
கர்நாடக மாநிலம், பெங்களூரு ஈஜிபுரா பகுதியில், விஸ்வரூப பெருமாள் சிலை அமைக்க அப்பகுதி மக்கள் முடிவு செய்தனர். இதற்காக 64 அடி உயரம், 26 அடி அகலம் கொண்ட பாறையை, திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த கொரக்கோட்டை மலையில் இருந்து 350 டன் எடையில் வெட்டி எடுக்கப்பட்டது. இதில் பெருமாளின் முகம் மற்றும் இரண்டு கைகள் வடிவமைக்கப்பட்டது.
கடந்த நவம்பர் மாதம் 7-ந் தேதி 240 டயர்கள் கொண்ட மிகப்பெரிய லாரியில் அந்த சிலை புறப்பட்டு கடந்த மாதம் 16-ந் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டையை வந்தடைந்தது. அங்கிருந்து ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, மத்தூர், பர்கூர் வழியாக கிருஷ்ணகிரிக்கு கடந்த 31-ந் தேதி வந்தது.
இதைத்தொடர்ந்து 1-ந் தேதி கிருஷ்ணகிரி நகரம் வழியாக சுங்கச்சாவடியை கடந்தது. 2-ந் தேதி பந்தாரப்பள்ளியை சென்றடைந்த பெருமாள் சிலை, கடந்த 3-ந் தேதி குருபரப்பள்ளி அருகே உள்ள மார்க்கண்டேய நதியில் உள்ள பாலம் அருகில் சென்றது. அந்த பாலத்தில் பெருமாள் சிலையுடன் லாரி செல்ல முடியாது என்பதால் அருகில் தற்காலிக பாலம் அமைக்கும் பணிகள் நடந்தன. அதன் வழியாக சிலையை கொண்டு செல்ல ஏற்பாடுகள் நடந்தன.
ஆனாலும் டயர்கள் சுற்றும் போது முன்னால் உள்ள என்ஜின் மேலே தூக்கியது. இதையடுத்து தற்காலிக சாலையை சமப்படுத்த பணிகள் நடந்தன. ஆனாலும் தொடர்ந்து அந்த சிலையை அங்கிருந்து கொண்டு செல்ல முடியவில்லை. இதனால் சென்னையில் இருந்து உயர்ரக என்ஜின் கொண்ட வாகனம் வரவழைக்கப்படுகிறது. அந்த வாகனம் நேற்று மாலை வரையில் குருபரப்பள்ளியை வந்தடையவில்லை.
இதனால் கடந்த 5 நாட்களாக சிலை கொண்டு செல்லப்படும் லாரி ஒரே இடத்தில் நிற்கிறது. அங்கிருந்து சிலை கடந்தாலும் சின்னார் பாலத்தை சிலை கடந்து செல்ல முடியாது. அங்கும் தற்காலிக பாலம் அமைக்க வேண்டும். தொடர்ந்து ஓசூர் செல்லும் வழியில் பேரண்டப்பள்ளி உள்பட பல இடங்களில் தற்காலிகமாக பாலங்கள் அமைக்க வேண்டும் என்பதால் பெருமாள் சிலை ஓசூரை கடந்து செல்ல சுமார் 10 முதல் 15 நாட்கள் வரை ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சிலையை கொண்டு செல்வதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டுள்ளது.
Related Tags :
Next Story