புதிய தொழில் முனைவோருக்கு ரூ.5 கோடி வரை வங்கிகடன் கலெக்டர் வீரராகவராவ் தகவல்


புதிய தொழில் முனைவோருக்கு ரூ.5 கோடி வரை வங்கிகடன் கலெக்டர் வீரராகவராவ் தகவல்
x
தினத்தந்தி 8 Feb 2019 4:00 AM IST (Updated: 8 Feb 2019 12:05 AM IST)
t-max-icont-min-icon

தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தில் புதிய தொழில் முனைவோருக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை வங்கி கடனுதவி வழங்கப்பட உள்ளதாக மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம்,

படித்த, முதல் தலைமுறை தொழில் முனைவோர்கள் பயன்பெறும் வகையில் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தில் பயன்பெற பட்டம், பட்டயப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ. படித்த தொழில் தொடங்க ஆர்வமுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. நீட்ஸ் திட்டத்தின் கீழ் உற்பத்தி மற்றும் சேவை தொழில்கள் ஆரம்பிக்க குறைந்தபட்சம் ரூ.10 லட்சம் முதல் அதிக பட்சம் ரூ.5 கோடி வரையிலான தொழில் திட்டங்களுக்கு வங்கிக்கடன் பெற பரிந்துரைக்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் நாளில் 21 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். பொதுப் பிரிவினராய் இருப்பின் 35 வயதிற்கு மிகாமலும், ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர், பெண்கள், முன்னாள் ராணுவத்தினர், திருநங்கையர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்ற சிறப்பு பிரிவினராக இருப்பின் 45 வயதிற்கு மிகாமலும் இருத்தல் வேண்டும.் வருமான வரம்பு ஏதுமில்லை. விண்ணப்பதாரர் 3 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் தொடர்ந்து வசிப்பவராகவும், முதல் தலைமுறை தொழில்முனைவோராகவும் இருக்க வேண்டும்.

தொழில் முனைவோர் பொது பிரிவினராக இருந்தால் திட்ட மதிப்பீட்டில் சொந்த முதலீடு 10 சதவீதமாகவும், சிறப்பு பிரிவினராக இருந்தால் 5 சதவீதமாகவும் இருத்தல் வேண்டும். இத்திட்டத்தின் கீழ் தொடங்கப்படும் தொழில்களுக்கு திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.30 லட்சம் மானியமும், 3 சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படும். பங்குதாரர் நிறுவனங்களும் இத்திட்டத்தின் கீழ் பயன் பெறலாம்.

நீட்ஸ் திட்டத்தின் கீழ் உற்பத்தி மற்றும் சேவை தொழில்கள் தொழில்முனைவோர்க்கான பட்டியலில் மேலும் புதிய 16 தொழில்கள் சேர்க்கப்பட்டுள்ளன. எனவே தொழில் ஆரம்பிக்க விரும்பும் முதல் தலைமுறை தொழில் முனைவோர் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட தொழில் மையத்தை நேரிலோ, அல்லது 04567-230497 என்ற தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு விவரங்களை பெற்று www.msm-e-o-n-l-i-ne.tn.gov.in/ne-eds என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்து பயனடையலாம். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் தெரிவித்தார்.

Next Story