மீனவர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்: தந்தையே மகனை வெட்டிக்கொன்று புதைத்தது அம்பலம்


மீனவர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்: தந்தையே மகனை வெட்டிக்கொன்று புதைத்தது அம்பலம்
x
தினத்தந்தி 8 Feb 2019 3:45 AM IST (Updated: 8 Feb 2019 12:16 AM IST)
t-max-icont-min-icon

முத்துப்பேட்டை அருகே மீனவர் கொலை வழக்கில் திடீர் திருப்பமாக தந்தையே மகனை வெட்டிக்கொன்று புதைத்தது போலீசாரின் விசாரணையில் அம்பலமானது.

முத்துப்பேட்டை,

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள ஜாம்புவானோடை கடல் மற்றும் அலையாத்திக்காட்டுக்கு செல்லும் பாதையில் கோரையாற்றின் நடுவே நடுத்திட்டு என்ற மணற்பாங்கான பகுதி உள்ளது. கடந்த 4-ந் தேதி இப்பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் அங்கு சென்று பார்த்தபோது வாலிபர் ஒருவரின் உடல் பாதி அளவு மண்ணில் புதைந்த நிலையில் இருந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த முத்துப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இறந்து கிடந்தவரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில், மண்ணில் பிணமாக புதைந்திருந்தவர், ஜாம்புவானோடை மேலக்காடு பகுதியை சேர்ந்த மீனவர் சிவக்குமார் (வயது 35) என்றும், அவர் கொலை செய்யப்பட்டு மண்ணில் புதைக்கப்பட்டதும் தெரிய வந்தது.

இது குறித்து முத்துப்பேட்டை போலீசார் நடத்திய விசாரணையில் சிவக்குமார் தனது மனைவி நேசமணி யுடன் ஏற்பட்ட மனவருத்தத்தில் வீட்டுக்கு செல்லாமல் நடுத்திட்டு பகுதியில் கூடாரம் அமைத்து தங்கி இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர்.

இந்தநிலையில் ஜாம்புவானோடையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்த சிவக்குமாரின் தந்தை பழனிவேலை(65), போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சிவக்குமார் அடிக்கடி தன்னையும்(பழனிவேல்) தனது குடும்பத்தினரையும் தாக்கியதால் ஆத்திரம் அடைந்த பழனிவேல், தனது மகன் சிவக்குமாரை வெட்டிக்கொன்று உடலை மணல்திட்டில் புதைத்தது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் பழனிவேலை கைது செய்து திருத்துறைப்பூண்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

தகராறு செய்த மகனை, தந்தையே வெட்டிக்கொன்ற சம்பவம் முத்துப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story