காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகள் பதுக்கல் குடோன்களில் வெளி மாவட்ட அதிகாரிகள் ஆய்வு


காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகள் பதுக்கல் குடோன்களில் வெளி மாவட்ட அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 8 Feb 2019 3:45 AM IST (Updated: 8 Feb 2019 12:52 AM IST)
t-max-icont-min-icon

காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகள் பதுக்கிய குடோன்களில் வெளி மாவட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

மீஞ்சூர்,

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த நாலூர் ஏரிக்கரைக்கு அருகில் இந்துஜா நகர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான 2 குடோன்கள் இருந்தது. இதில் வேளாண் தொழிலுக்கு பயன்படுத்தும் களைக்கொல்லி, பூஞ்சானகொல்லி, பூச்சிக்கொல்லி உட்பட 40 வகையான மருந்துகள் அட்டைப்பெட்டிகளில் காலாவதியாகி அரசு அனுமதி இல்லாமல் இருந்தது. இது குறித்து தகவலறிந்த போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகள் இருப்பதை கண்டுபிடித்து குடோன்களுக்கு கடந்த 4-ந்தேதி சீல் வைத்தனர்.

அதன் பின்னர் திருவள்ளூர் மாவட்ட வேளாண் துறை அதிகாரிகள் வந்து பூச்சிக்கொல்லி மருந்துகளை ஆய்வு செய்தனர். தமிழக அரசின் வேளாண்மை துறை இயக்குனரகம் மீஞ்சூரை அடுத்த நாலூர் கிராமத்தில் பதுக்கி வைத்திருந்த வேளாண் தொழில் சார்ந்த பூச்சிக்கொல்லி மருந்துகள் பற்றிய விவரங்கள், தயாரிக்கப்பட்ட தேதி, காலாவதியான தேதி மருந்துகளின் விவரம், கம்பெனிகளின் பெயர் போன்றவற்றை தர மதிப்பீடுகள், அளவுகள் குறித்து கணக்கெடுக்கும் பணி தொடங்க உத்தரவிட்டிருந்தது.

அதன்படி திருவள்ளூர், ராமநாதபுரம், சேலம், ஈரோடு, அரியலூர், கரூர், பெரம்பலூர், திருப்பூர், கிருஷ்ணகிரி போன்ற வெளி மாவட்டங்களை சேர்ந்த வேளாண்மை தரக்கட்டுப்பாடு உதவி இயக்குனர்கள், உதவி வேளாண்மை அலுவலர்கள், வேளாண்மை நிர்வாக அலுவலர்கள் அடங்கிய 40-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அந்த குடோன்களில் ஆய்வில் ஈடுபட்டனர். பின்னர் நிர்வாக அலுவலர் சகாய நிர்மலா சீல் வைக்கப்பட்ட குடோன்களை மீஞ்சூர் வேளாண்மை உதவி இயக்குனர் ஜீவராணி முன்னிலையில் திறந்தார். வேளாண் துறை அதிகாரிகள் உள்ளே சென்று கணக்கெடுக்கும் பணியை தொடங்கினர். திருவள்ளூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் பாண்டியன் கணக்கெடுப்பு பணிகளை பார்வையிட்டார்.

இதனையடுத்து சென்னை வேளாண்மை துறை தரக்கட்டுப்பாடு பயிர் பாதுகாப்பு துணை இயக்குனர் முரளிதரன் நேரில் வந்து பூச்சிக்கொல்லி மருந்துகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பகுதிகளுக்கு சென்று காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகள் குறித்து கேட்டறிந்தார்.

இந்தப் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் மீஞ்சூர் வட்டார உரம் மற்றும் பூச்சி மருந்து ஆய்வாளர் டில்லிபாபு, குடோன்களில் காலாவதியான பூச்சிக்கொல்லி மருத்துகளை பதுக்கி வைத்திருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீஞ்சூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

Next Story