சுவர் ஏறி குதித்து நடிகர் அக்ஷய்குமார் வீட்டுக்குள் புகுந்த வாலிபரால் பரபரப்பு
சுவர் ஏறி குதித்து நடிகர் அக்ஷய்குமார் வீட்டுக்குள் புகுந்த வாலிபரால் பரபரப்பு உண்டானது.
மும்பை,
இந்தி நடிகர் அக்ஷய்குமார் ஜூகுவில் உள்ள பங்களா வீட்டில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வாலிபர் ஒருவர் அக்ஷய்குமாரின் வீட்டுக்குள் புகுந்து விட்டார். இது நேற்று அதிகாலை 2 மணியளவில் தான் அங்கு பணியில் இருந்த காவலாளிகளுக்கு தெரியவந்தது.
வீட்டின் ஒரு மூலையில் பதுங்கியிருந்த அந்த வாலிபரை காவலாளிகள் மடக்கி பிடித்தனர். பின்னர் இதுபற்றி ஜூகு போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் அங்கு வந்து அந்த வாலிபரை கைது செய்தனர். அந்த நேரத்தில் நடிகர் அக்ஷய்குமார் வீட்டில் இருந்தார். கைதான வாலிபரிடம் நடத்திய விசாரணையில், அவர் அரியானாவை சேர்ந்த அங்கித் கோஸ்வாமி (வயது20) என்பது தெரியவந்தது.
இவர் நடிகர் அக்ஷய்குமாரின் தீவிர ரசிகர் என்பதும் அவரை பார்ப்பதற்காக அரியானாவில் இருந்து ரெயிலில் மும்பை வந்ததும் தெரியவந்தது. பாந்திரா டெர்மினசில் வந்து இறங்கிய அவர் நேராக இரவு 11.30 மணியளவில் ஜூகுவில் உள்ள நடிகர் அக்ஷய்குமாரின் வீட்டுக்கு சென்றார்.
அங்கு காவலாளிகள் தன்னை உள்ளே நுழைய விட மாட்டார்கள் என்பதை அறிந்த அவர் தந்திரமாக அக்ஷய்குமாரின் வீட்டுக்குள் நுழைய முடிவு செய்தார்.
அப்போது, அக்ஷய்குமாரின் வீட்டு சுற்றுச்சுவர் அருகே ஒரு வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்ததை கவனித்த அவர் அந்த வாகனத்தின் மேற்கூரையில் ஏறி அங்கிருந்து சுற்றுச்சுவர் மீது தாவி உள்ளே குதித்தார் என்பது தெரியவந்தது.
இதையடுத்து அந்த வாலிபர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். கோர்ட்டு அவரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டது. நடிகர் அக்ஷய்குமார் வீட்டுக்குள் வாலிபர் சுவர் ஏறி குதித்து புகுந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story