என்.எல்.சி. 3-வது சுரங்கம் அமைக்க எதிர்ப்பு, கம்மாபுரத்தில் தி.மு.க.வினர் உண்ணாவிரதம்
என்.எல்.சி. 3-வது சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கம்மாபுரத்தில் தி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.
கம்மாபுரம்,
நெய்வேலியை தலைமை இடமாக கொண்டு என்.எல்.சி. இந்தியா நிறுவனம், அதன் சுற்று வட்டார பகுதியில் திறந்தவெளியில் சுரங்கம் அமைத்து, ராட்சத எந்திரங்கள் மூலம் நிலக்கரி வெட்டியெடுத்து மின்சாரம் தயாரித்து வருகிறது. இவ்வாறு தயாரிக்கப்படும் மின்சாரம், தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களுக்கும் வினியோகம் செய்யப்படுகிறது. இதுபோக தனியார் நிறுவனங்களுக்கு நிலக்கரியும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் 3-வது திறந்தவெளி சுரங்கம் அமைக்க முடிவு செய்துள்ளது. இதற்காக கம்மாபுரம் மற்றும் புவனகிரி ஒன்றியத்திற்குட்பட்ட 40 கிராமங்களில் 12 ஆயிரம் ஏக்கர் நிலங்களையும், வீடுகளையும் கையகப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள், விவசாயிகள், அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் தி.மு.க. சார்பில் கம்மாபுரத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. என்.எல்.சி. 3-வது சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணியை உடனே நிறுத்தக்கோரி நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்திற்கு கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, பேசினார்.
இந்த போராட்டத்தில் புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் துரை.கி.சரவணன், தனியார் கரும்பு உற்பத்தியாளர் சங்க மாநில செயலாளர் கார்மாங்குடி வெங்கடேசன், புவனகிரி ஒன்றிய செயலாளர் டாக்டர் மனோகரன், கம்மாபுரம் ஒன்றிய துணை செயலாளர் கணேசன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் ராமசாமி, சாந்தி சுந்தரபாண்டியன், இளவரசன் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள், தி.மு.க. நிர்வாகிகள், விவசாயிகள் சங்கத்தினர், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story