சிங்காரா வனப்பகுதியில் சுருள்கொம்பு மான்களின் எண்ணிக்கை அதிகரிப்பு


சிங்காரா வனப்பகுதியில் சுருள்கொம்பு மான்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
x
தினத்தந்தி 7 Feb 2019 10:30 PM GMT (Updated: 7 Feb 2019 9:00 PM GMT)

சிங்காரா வனப்பகுதியில் சுருள்கொம்பு மான்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இதனால் வன ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மசினகுடி,

நீலகிரி மாவட்டத்தில் 65 சதவீத வனப்பகுதி உள்ளது. இங்கு சோலை காடுகள், முட்புதர் காடுகள் என 2 வகையான காடுகள் இருக்கின்றன. இதில் முட்புதர் காடுகளின் பரப்பளவு அதிகமாக உள்ளது. இங்கு காட்டுயானை, புலி, சிறுத்தைப்புலி, மான், கரடி, செந்நாய், காட்டெருமை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. குறிப்பாக புள்ளி மான், கடமான், குரைக்கும் மான், சுருள்கொம்பு மான் என 4 வகையான மான்கள் இந்த காடுகளில் சுற்றித்திரிகின்றன. இதில் குரைக்கும் மான்கள் மற்றும் சுருள்கொம்பு மான்கள் அழிந்து வரும் வன விலங்குகளின் பட்டியலில் உள்ளன. மனிதர்கள் நடமாட்டம் இல்லாத அடர்ந்த வனப்பகுதிகளில் வாழும் இந்த மான்களை காண்பது மிகவும் அரிது.

மசினகுடி, மாயார், சிங்காரா, ஆனைக்கட்டி, அசூரமட்டம், தெங்குமரஹாடா ஆகிய வனப்பகுதிகளில் சுருள்கொம்பு மான்கள் உள்ளன. இந்த வனப்பகுதிகளில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு ஆயிரக்கணக்கான சுருள்கொம்பு மான்கள் இருந்தது கணக்கெடுப்பில் தெரியவந்தது. ஆனால் நோய் தாக்குதல் மற்றும் சமூக விரோதிகளால் வேட்டையாடப்படுதல் போன்ற காரணங்களால் அவற்றின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. தற்போது நூற்றுக்கும் குறைவான சுருள்கொம்பு மான்கள் மட்டுமே இந்த வனப்பகுதிகளில் உள்ளதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. வெகுவாக எண்ணிக்கை குறைந்ததால் மேற்கண்ட வனப்பகுதிகளில் ரோந்து செல்லும் வனத்துறை ஊழியர்கள் சுருள்கொம்பு மான்களை காண்பது அரிதாகி விட்டது.

இந்த நிலையில் சமீப காலமாக மசினகுடி அருகே உள்ள சிங்காரா வனப்பகுதியில் 5 சுருள்கொம்பு மான்கள் சுற்றித்திரிந்து வருகின்றன. அவற்றை வனத்துறை ஊழியர்களும், வாகன சவாரி செல்லும் சுற்றுலா பயணிகளும் வியப்புடன் கண்டு ரசித்து செல்கின்றனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

சுருள்கொம்பு மான்கள் மக்கள் நடமாட்டம் இல்லாத இடங்களில் வாழ கூடியவை. வனத்துறை ஊழியர்களை கண்டாலே கண் இமைக்கும் நேரத்தில் புதருக்குள் ஓடி சென்று மறையக்கூடியவை. சிங்காரா வனப்பகுதியில் சுமார் 10 மான்கள் உள்ளன. அந்த மான்கள் சில நாட்கள் அருகில் உள்ள மசினகுடி வனப்பகுதிக்கு சென்று பிறகு மீண்டும் சிங்காரா வனப்பகுதிக்கு திரும்பி வந்து விடுகின்றன. அதே போல சீகூர் வனப்பகுதியில் உள்ள சுருள்கொம்பு மான்கள் குறிப்பிட்ட வனப்பகுதியில் மட்டுமே சுற்றித்திரிந்து வருகின்றன. அவற்றை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். தற்போது இந்த வகை மான்களை காண்பது மகிழ்ச்சியாக உள்ளது. அவற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருவதே இதற்கு காரணம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

சிங்காரா வனப்பகுதியில் சுருள்கொம்பு மான்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதால், வன ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story