இளம்பெண் கொலை உள்பட 4 வழக்குகளில் துப்பு கிடைக்காமல் போலீசார் திணறல்
துண்டு துண்டாக வெட்டிக்கொன்று குளத்தில் வீசப்பட்ட இளம்பெண் உள்பட 4 பேரின் கொலை வழக்குகளில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகிறார்கள்.
கோவை,
கோவை செல்வபுரம் பனைமரத்தூர் பகுதி செல்வாம்பதி குளத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 25-ந் தேதி 25 வயது மதிக்கத்தக்க ஒரு இளம்பெண்ணை கொன்று, அவருடைய உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு சாக்கு மூட்டைக்குள் வைத்து குளத்தில் வீசப்பட்டு இருந்தது. அவரின் உடல் அழுகிய நிலையில் இருந்தது.
இதுகுறித்து செல்வபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்தனர். அதில், அந்த பெண் காலில் அணிந்து இருந்த மெட்டி, சுடிதாரை வைத்து அவர் வடமாநில பெண் போன்று இருப்பது தெரியவந்தது. ஆனால் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார்? என்பதை கண்டுபிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது. அவர்கள் தமிழகத்தில் மாயமான பெண்களின் புகைப்படங்களை சேகரித்து விசாரணை நடத்தினார்கள்.
மேலும் விழுப்புரம், நெல்லை ஆகிய பகுதிகளில், கொலை செய்த நபரை துண்டு துண்டாக வெட்டி வீசும் சம்பவம் நடந்துள்ளது. எனவே அந்த பகுதியை சேர்ந்த யாராவது பெண்ணை கொன்று குளத்தில் வீசி சென்றார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டது. இந்த சம்பவம் நடந்து 7 மாதங்களுக்கும் மேல் ஆகிறது. இருப்பினும் கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி குளத்தில் போடப்பட்ட பெண் யார்? என்பதை கண்டறிய துப்பு கிடைக்காமல் போலீசார் திணறி வருகிறார்கள்.
கோவை பீளமேடு தனபால் லே-அவுட்டை சேர்ந்த சி.மணி (வயது 45). பூசாரி. ஜோதிடராகவும் இருந்து வந்தார். கடந்த 2015-ம் ஆண்டு வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். வீட்டில் இருந்த 20 பவுன் தங்கநகை, மற்றும் ரொக்கப்பணம், வீட்டில் இருந்த டி.வி.யை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்துச்சென்றனர்.
இந்த கொலை தொடர்பாக தனிப்படை அமைத்து 100-க்கும் மேலானவர்களை பிடித்து விசாரணை நடத்தியும் இதுவரை துப்புத்துலங்கவில்லை.
கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், கோவை அவினாசி ரோடு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பாப்பாத்தி (60), அவருடைய மகள் கீதா (35) ஆகியோர் பிணமாக கிடந்தனர். இறந்து நீண்டநாள் ஆகி எலும்புக்கூடாக உடல்கள் மீட்கப்பட்டன.
மேலும் மனநலம் பாதிக்கப்பட்ட பாப்பாத்தியின் மகன் சரவணகுமார் மாயமானார். தாய் மற்றும் சகோதரியை கொலை செய்து விட்டு மாயமானதாக போலீசார் சந்தேகித்தனர். சரவணகுமார் தொடர்பான தகவலை பொதுமக்கள் தெரிந்தால் கூறும்படி பல இடங்களில் நோட்டீசுகள் ஒட்டப்பட்டும் இதுவரை அவர் தொடர்பான தகவல் தெரியவில்லை.
கோவையில் மேற்கண்ட 4 கொலை வழக்குகளில் துப்புதுலங்காதது குறித்து போலீஸ் கமிஷனர் சுமித்சரண் கூறும்போது, ‘இந்த கொலை வழக்குகள் கண்டுபிடிக்க முடியாத வழக்குகள் என்று கூறமுடியாது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. சிறைக்கைதிகள், மற்றும் கொலைகள் நடைபெற்ற பகுதிகளில் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு துப்புதுலக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது’ என்று கூறினார்.
சென்னை கோடம்பாக்கத்தில் கடந்த 21-ந் தேதி சேகரித்த குப்பையை பள்ளிக்கரணை பகுதியில் கிடங்கில் கொட்டியபோது அந்த குப்பை குவியலில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் பெண்ணின் வலது கை மற்றும் கால்கள் கிடந்தது. இதை வைத்தே சென்னை போலீசார் துப்பு துலக்கி, இந்த கொலையில் அந்த பெண்ணின் கணவரான சினிமா துணை இயக்குனர் பாலகிருஷ்ணன் என்பவரை கைதுசெய்தனர்.
இந்த சம்பவம் நடந்த சில நாட்களிலேயே சென்னை போலீசார் விரைந்து செயல்பட்டு கொலையாளியை பிடித்தனர். ஆனால் கோவை போலீசாரால் இதுபோன்று கொலை சம்பவங்களில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்க முடியாமல் திணறுவது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story