காட்டுமன்னார்கோவில் அருகே கூடுதலாக திறக்க இருந்த டாஸ்மாக் கடையை கிராம மக்கள் முற்றுகை
காட்டுமன்னார்கோவில் அருகே கூடுதலாக திறக்க இருந்த டாஸ்மாக் கடையை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
காட்டுமன்னார்கோவில்,
காட்டுமன்னார்கோவில் அருகே மா.உத்தமசோழகன் கிராமத்தில் கடந்த 2 ஆண்டுகளாக ஒரு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இங்கு மது வாங்குவதற்காக மதுபிரியர்கள் கூட்டம் அலைமோதுகிறது. எனவே கூடுதலாக ஒரு டாஸ்மாக் கடை திறக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இதற்காக மா.உத்தமசோழகன் கிராமத்தில் உள்ள மெயின்ரோட்டில் அதிகாரிகள் இடம் தேர்வு செய்தனர். அந்த இடத்தில் டாஸ்மாக் கடையும் அமைக்கப்பட்டுள்ளது. அதனை திறப்பதற்கான நடவடிக்கையில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இது பற்றி அறிந்ததும் அந்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, கடலூர் மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் மற்றும் காட்டுமன்னார்கோவில் தாசில்தாரிடம் மனு கொடுத்தனர். இதனிடையே அந்த இடத்தில் நேற்று டாஸ்மாக் கடை திறக்கப்பட இருப்பதாக தகவல் பரவியது. இதையடுத்து மா.உத்தமசோழகன் கிராமத்தை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டவர்கள் ஒன்று திரண்டு சென்று கூடுதலாக திறக்க இருந்த டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்ததும் புத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது கிராம மக்கள், ஏற்கனவே உள்ள டாஸ்மாக் கடைக்கு வெளியூரை சேர்ந்த மதுபிரியர்கள் வந்து செல்கிறார்கள். மதுபிரியர்களால் எங்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது. இதனிடையே கூடுதலாக ஒரு டாஸ்டாக் கடையை திறந்தால், எங்களது கிராமம் தாங்காது. தினமும் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும். எனவே கூடுதலாக டாஸ்மாக் கடையை திறக்கக்கூடாது என்றனர்.
இதை கேட்ட போலீசார், தற்சமயம் இங்கு டாஸ்டாக் கடை திறக்கப்படாது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுங்கள் என்றனர். இதை ஏற்ற கிராம மக்கள், போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். கிராம மக்கள் போராட்டத்தின் காரணமாக நேற்று அந்த டாஸ்மாக் கடை திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story