40 பேர் கடிதம் கொடுத்தாலும் பெற்று கொள்வேன், பதவி ராஜினாமா குறித்து எம்.எல்.ஏ.க்கள் யாரும் என்னிடம் பேசவில்லை
40 பேர் கடிதம் கொடுத்தாலும் பெற்று கொள்வேன் என்றும், பதவி ராஜினாமா குறித்து எம்.எல்.ஏ.க்கள் யாரும் என்னிடம் பேசவில்லை எனவும் சபாநாயகர் ரமேஷ்குமார் கூறினார்.
கோலார் தங்கவயல்,
கோலார் மாவட்டம் சீனிவாசப்பூர் தாலுகா ஜனப்பனஹள்ளி கிராமத்தில் உள்ள கணேசா கோவிலில் நேற்று, சீனிவாசப்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வும், சட்டசபை சபாநாயகருமான ரமேஷ்குமார் சிறப்பு பூஜைகள் செய்தார். இதன்பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
காங்கிரஸ் கட்சியுடன் தொடர்பில் இல்லாத 4 எம்.எல்.ஏ.க்கள் இதுவரை என்னை தொடர்பு கொண்டு ராஜினாமா செய்வது குறித்து பேசவில்லை. அவர்கள் மட்டும் அல்ல எந்த எம்.எல்.ஏ.வும் என்னிடம் ராஜினாமா செய்வது குறித்து இதுவரை பேசவில்லை.
4 எம்.எல்.ஏ.க்கள் அல்ல, 40 எம்.எல்.ஏ.க்கள் என்னிடம் வந்து ராஜினாமா கடிதத்தை கொடுத்தாலும் அதை நான் பெற்றுக் கொள்வேன். அதுபற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை. எம்.எல்.ஏ.க்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க எனக்கு அதிகாரம் இல்லை. அது கட்சி சம்பந்தப்பட்டது.
ஆனந்த் சிங் எம்.எல்.ஏ.வை தாக்கிய கணேஷ் எம்.எல்.ஏ. இதுவரை கைது செய்யப்படாதது குறித்து என்னிடம் கேட்கிறார்கள். நான் ஒன்றும் போலீஸ் அதிகாரி இல்லை. நான் சபாநாயகர். கர்நாடக அரசியலில் தற்போதைய நிலவரம் குறித்து என்னிடம் கேட்க வேண்டாம். இந்த ஆண்டு நல்ல மழை பெய்ய வேண்டி கோவிலில் சிறப்பு பூஜை செய்து உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story