ஆங்கிலத்தில் வாசிக்கும் பழக்கத்தை மாணவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும் ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் அறிவுரை
ஆங்கிலத்தில் வாசிக்கும் பழக்கத்தை மாணவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் அறிவுரை வழங்கினார்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டம் அரசு பொதுத் தேர்வில் 100 சதவீதம் வெற்றி பெற வேண்டியும், அதற்கான இலக்கை நோக்கியும் மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை மூலம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக அரசு பொதுத்தேர்வில் ஆங்கில பாடத்தில் மாணவர்கள் தேர்ச்சி பெறுவதற்கும் ஆங்கிலத்தின் மீதான பயத்தை போக்குவதற்கும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க ஏதுவாக 335 ஆங்கில பாட, பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஒரு நாள் பயிற்சி வகுப்பு திருவண்ணாமலை தியாகி நா.அண்ணாமலைப் பிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயக்குமார் தலைமை தாங்கி பேசியதாவது:–
ஆங்கிலப்பாடத்தை எளிதில் கற்க முடியாது என்ற பயம் மாணவர்களிடம் தொற்றிக்கொண்டு உள்ளது. தாய்மொழியில் கற்றல் திறன் உள்ள ஒரு மாணவனுக்கு 100 மொழிகளைக் கூட கற்கும் திறன் இருக்கிறது. எனவே ஆங்கிலப்பாடம் கற்க முடியாது என்ற மனநிலையில் உள்ள மாணவர்களுக்கு தெளிவுப்படுத்தி தாய்மொழியில் நல்ல வாசிப்பு திறன் இருப்பதை போல ஆங்கிலத்திலும் வாசிக்க முடியும் என்ற நம்பிக்கையை ஊட்ட வேண்டும்.
இந்த ஆண்டு 9–ம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவர்களும் ஆங்கிலத்தில் குறைந்தபட்சம் வாசிக்கும் திறனை பெற வைத்து, 10–ம் வகுப்புக்கு மாணவர்களை அனுப்ப வேண்டும். எனவே, அனைத்து ஆங்கில பட்டதாரி ஆசிரியர்களும், சிறப்பு கவனம் செலுத்தி ஆங்கிலத்தின் மீதான பயத்தைப் போக்கி மாணவர்களுக்கு நம்பிக்கையை ஊட்டி அவர்கள் ஆங்கிலத்தில் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் அனைவருக்கும் கல்வி இயக்க உதவித்திட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர், முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் அன்பழகன், திருவண்ணாமலை தியாகி நா.அண்ணாமலைப் பிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சேகர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.