குடும்பத்தகராறில் 200 அடி உயர மின்கோபுரத்தில் ஏறி குதித்து தொழிலாளி தற்கொலை ஆரணி அருகே பரபரப்பு


குடும்பத்தகராறில் 200 அடி உயர மின்கோபுரத்தில் ஏறி குதித்து தொழிலாளி தற்கொலை ஆரணி அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 9 Feb 2019 4:30 AM IST (Updated: 8 Feb 2019 8:03 PM IST)
t-max-icont-min-icon

ஆரணி அருகே குடும்பத்தகராறில் 200 அடி உயர மின்கோபுரத்தில் ஏறி குதித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

ஆரணி,

திருவண்ணாமலை மாவட்டம் போளுர் தாலுகா, ஏந்துவாம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 32), சென்னையில் கூலி வேலை செய்து வந்தார். கடந்த வாரம் விடுமுறைக்கு ஊருக்கு வந்தவர் மீண்டும் வேலைக்கு செல்லவில்லை. இவருக்கும் கீதா என்பவருக்கும் திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு கிரிஜா (8), ஆர்யா (2) ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மனைவி கீதாவின் நடத்தையில் சந்தேகம் இருப்பதாக கூறி கணவன், மனைவிக்கு இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டது.

இதில் மனமுடைந்த ரமேஷ் நேற்று காலை ஆரணி அருகே உள்ள நெல்வாய்பாளையம் கிராமத்தில் நிலத்தில் அமைக்கப்பட்டு வருகிற உயர் மின்கோபுரத்துக்கு வந்தார். பின்னர் அவர் சுமார் 200 அடி உயரமுள்ள கோபுரத்தில் ஏறி, அங்கிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ள போவதாக தான் வைத்திருந்த செல்போன் மூலம் உறவினர்களுக்கும், தெரிந்தவர்களுக்கும் தகவல் அளித்துவிட்டு மின்கோபுரத்தின் மேல் ஏறினார்.

இந்த தகவல் காட்டுத்தீ போல பரவியது. இதையடுத்து ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு இ.செந்தில், களம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமுர்த்தி, சப்–இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி, ஆரணி தாசில்தார் கிருஷ்ணசாமி, ஆரணி தீயணைப்பு நிலைய அதிகாரி பேச்சுக்காளை தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்தில் குவிந்தனர். 108 ஆம்புலன்சும் வரவழைக்கப்பட்டது. மேலும் ரமேசின் மனைவி கீதா மற்றும் குழந்தைகள், உறவினர்கள் அங்கு வந்து கோபுரத்தின் மேலே இருந்த ரமேசை கீழே இறங்கி வருமாறு கூறி, கதறி அழுதனர்.

தீயணைப்பு வீரர்கள் உயர் மின்கோபுரத்தில் ஏறி பேச்சுவார்த்தைக்கும் முற்பட்டனர். மேலும் போலீசாரும், வருவாய்த்துறையினரும் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி மூலமாகவும், போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்ரவர்த்தி மூலமாகவும் கோபுரத்தில் நின்றிருந்த ரமேசிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

சுமார் 5 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தை முடிவுக்கு வராததால் மேலே இருந்து ரமேஷ் கீழே குதித்தார். அப்போது அவரை மீட்பதற்காக கீழே வலை விரித்திருந்தனர். ஆனால் அவர் வழியிலேயே அவருடைய சட்டை ஒரு கம்பியில் சிக்கிக் கொண்டது. இதனால் அவர் அந்தரத்தில் தவித்தார். சிறிது நேரத்தில் சட்டை கிழித்துக்கொண்டு தலைகீழாக அவர் விழுந்ததில் தலைகம்பியில் அடிபட்டு மூளை சிதறிய நிலையில் கீழே விழுந்து பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து களம்பூர் போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

200 அடி உயர மின்கோபுரத்தில் இருந்து தொழிலாளி கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story