மூலைக்கரைப்பட்டி நகரப்பஞ்சாயத்து அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை சாலை அமைத்து தர வலியுறுத்தல்
மூலைக்கரைப்பட்டி நகரப்பஞ்சாயத்து அலுவலகத்தை பொதுமக்கள் நேற்று முற்றுகையிட்டனர்.
இட்டமொழி,
மூலைக்கரைப்பட்டி நகரப்பஞ்சாயத்து அலுவலகத்தை பொதுமக்கள் நேற்று முற்றுகையிட்டனர்.
சாலையை சீரமைக்க கோரிக்கைநெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி நகரப்பஞ்சாயத்துக்கு உட்பட்ட 11–வது வார்டில் அமைந்துள்ளது அரசனார்குளம். இந்த கிராமம் மூலைக்கரைப்பட்டியில் இருந்து நாங்குநேரி செல்லும் சாலையில், மெயின் ரோட்டில் இருந்து சுமார் அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அரசனார்குளம் ஊருக்கு அடுத்து அரசனார்குளம் காலனி உள்ளது.
இந்தநிலையில் மெயின் ரோட்டில் இருந்து அரசனார்குளம் ஊருக்குள் செல்லும் சாலை மிகவும் பழுதடைந்து, குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனை சீரமைக்கக்கோரி பொதுமக்கள், மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை மனு கொடுத்திருந்தனர். இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு நெடுஞ்சாலைத்துறையினர் அரசனார்குளம் விலக்கில் இருந்து ஊருக்குள் செல்லும் சாலையை போடாமல், மற்றொரு பகுதியில் சாலை அமைத்ததாக கூறப்படுகிறது. அப்போது முதலில் இருந்தே சாலையை போட்டுவிட்டு, மற்றொரு பகுதிக்கும் சாலையை போடுங்கள் எனக்கூறி சாலை பணி மேற்கொள்ளும் லாரிகளை மறித்து பொதுமக்கள் வேலையை நிறுத்தி உள்ளனர். அவர்களிடம் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், மெயின் ரோடு விலக்கில் இருந்து சாலையை போட்டு தருகிறோம் என உறுதி அளித்துள்ளனர்.
நகரப்பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகைஇந்தநிலையில் நிறுத்தப்பட்ட சாலை பணிகள், நேற்று மீண்டும் அதே இடத்தில் தொடங்கியுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த அரசனார்குளம் பொதுமக்கள், மெயின் ரோட்டில் இருந்து ஊருக்குள் சாலை அமைக்க வலியுறுத்தி, நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் மூலைக்கரைப்பட்டி நகரப்பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அங்கு செயல் அலுவலர் இல்லாததால் பொதுமக்கள் அனைவரும், நகரப்பஞ்சாயத்து அலுவலக வாசலில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
பின்னர் இதுதொடர்பாக நகரப்பஞ்சாயத்து உதவி பொறியாளர் குருவம்மாள், செயல் அலுவலர் முருகன், போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்–இன்ஸ்பெக்டர் அந்தோணிராஜ் ஆகியோர் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், வருகிற திங்கட்கிழமை அன்று நகரப்பஞ்சாயத்து அலுவலகத்தில் வைத்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் பேசி சாலை அமைக்க ஏற்பாடு செய்து தருவதாக கூறியதன் பேரில், அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.