குப்பைகளை பிரித்து வழங்குவதற்காக தூத்துக்குடி மாநகராட்சி வீடுகளுக்கு 2 நிறங்களில் குப்பை தொட்டிகள் ஆணையாளர் ஆல்பிஜான்வர்க்கீஸ் தகவல்

குப்பைகளை பிரித்து வழங்குவதற்காக தூத்துக்குடி மாநகராட்சி வீடுகளுக்கு 2 நிறங்களில் குப்பை தொட்டிகள் ஆணையாளர் ஆல்பிஜான்வர்க்கீஸ் தகவல்
x
தினத்தந்தி 8 Feb 2019 9:30 PM GMT (Updated: 8 Feb 2019 2:59 PM GMT)

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள வீடுகளில் குப்பைகளை பிரித்து வழங்க வேண்டும் என்பதற்காக 2 நிறங்களில் குப்பை தொட்டிகள் வழங்கப்பட்டு உள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் ஆல்பிஜான்வர்க்கீஸ் தெரிவித்து உள்ளார்.

தூத்துக்குடி,

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது;–

திடக்கழிவு

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் பொது சுகாதார பிரிவின் மூலம் மாநகரில் சேகரமாகும் குப்பைகளை வீடுகள் தோறும் மக்கும் குப்பை மக்காத குப்பைகள் என பிரித்து வாங்குவதோடு மாநகராட்சிக்கு சொந்தமான நுண் உரக்கிடங்குகளில் முறையாக குப்பைகளை மறுசுழற்சி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

மாநகரின் பிரதான சாலைகளில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்கும் விதமாக காலை மற்றும் மாலை நேரங்களில் வியாபார ஸ்தலங்களில் சேகரமாகும் குப்பைகளை மாநகராட்சி பணியாளர்கள் நேரடியாக சென்று வாங்கி உரக்கிடங்கில் சேர்க்கும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் சாலைகளில் காணப்படும் மணல்களை அகற்றும் பணியும் நடைபெற்று வருகிறது.

2 நிறங்களில்

இந்த நிலையில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சேகரமாகும் குப்பைகளை தாங்களாகவே மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து வழங்கும் விதத்தில் தனியார் பங்களிப்புடன் வீடுகள் தோறும் வெவ்வேறு நிறங்களில் 2 குப்பை தொட்டிகள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. இதனை தொடர்ந்து மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட 14 வார்டுகளில் உள்ள வீடுகளுக்கு தலா 2 குப்பை தொட்டிகள் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் பங்களிப்பில் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் குப்பைகளை பிரித்து வழங்கும் பணியில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இதர மண்டலப் பகுதிகளிலும் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பில் குப்பை தொட்டிகள் வழங்கிட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.

Next Story