தமிழக பட்ஜெட் குறித்து தூத்துக்குடி மாவட்ட மக்கள் கருத்து


தமிழக பட்ஜெட் குறித்து தூத்துக்குடி மாவட்ட மக்கள் கருத்து
x
தினத்தந்தி 9 Feb 2019 3:15 AM IST (Updated: 8 Feb 2019 9:32 PM IST)
t-max-icont-min-icon

தமிழக பட்ஜெட் குறித்து தூத்துக்குடி மாவட்ட மக்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

தூத்துக்குடி, 

தமிழக பட்ஜெட் குறித்து தூத்துக்குடி மாவட்ட மக்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

பட்ஜெட் தாக்கல் 

தமிழக சட்டசபையில் 2019–20–ம் ஆண்டுக்கான பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட் குறித்து தூத்துக்குடி மாவட்ட மக்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்து உள்ளனர்.

அதன் விவரம் வருமாறு:–

வரவேற்பு 

தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழில் சங்க தலைவர் ஜோ பிரகாஷ்:– பட்ஜெட்டில் தொழில்துறைக்கு ரூ.172 கோடி ஒதுக்கீடு செய்திருப்பது வரவேற்கத்தக்கது. இதன்மூலம் வேலைவாய்ப்பு அதிகமாகும். சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. புதிய தொழில் தொடங்குபவர்களை ஊக்குவிக்கும் விதமாக, புதிய தொழில்முனைவோருக்கு மானியத்துடன் நிதி வழங்குவது, விளையாட்டு துறைக்கு போதிய அளவு நிதி ஒதுக்கீடு செய்து இருப்பது, பிரான்ஸ் நிறுவனம் உணவு பதப்படுத்தும் பூங்காவை தமிழகத்தில் அமைக்க இருப்பது உள்ளிட்ட சிறப்பு அம்சங்கள் பட்ஜெட்டில் உள்ளன. பொதுவாக தமிழக பட்ஜெட் வரவேற்கத்தக்கதாக உள்ளது.

தொழில் அதிபர் ராமசாமி என்ற ரவி:– தமிழக பட்ஜெட்டை ஒரு தொலைநோக்கு இல்லாத பட்ஜெட்டாகவே கருத முடியும். மழைநீரை தேக்குவதற்கு புதிய நீர்த்தேக்கங்கள் மற்றும் குளம், குட்டை, கால்வாய் பராமரிப்பு குறித்து பட்ஜெட்டில் எதுவும் இடம்பெறவில்லை. சுகாதாரம், நோய் தடுப்பு பற்றிய விழிப்புணர்வு குறித்தோ, இயற்கை சீற்றங்களால் வாழ்வாதாரத்தை பறி கொடுத்த கடலோர, மற்ற இடங்களை சேர்ந்த மக்களுக்கான மறுவாழ்வு குறித்தோ, அழிந்து வரும் கைத்தொழில்களை காப்பாற்றுவது குறித்தோ பட்ஜெட்டில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

ஏமாற்றம் அளிக்கிறது 

ஆசிரியர் செல்வராஜ்:– சூரியஒளி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. கல்விக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. பெண் குழந்தைகள் இடைநிற்றலை தவிர்க்க ஒவ்வொரு மாணவிக்கும் ரூ.5 ஆயிரம் வழங்கப்படுவது வரவேற்கத்தக்கது. ராமேசுவரத்தில் அப்துல்கலாம் பெயரில் புதிய கல்லூரி அமைக்கப்படுகிறது. நகர்ப்புறங்களில் குடிசைகளை மாற்றுவதற்கான திட்டம், 2030–க்குள் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம், முறையாக கடனை திருப்பி செலுத்துபவர்களின் பயிர்க்கடனுக்கான வட்டி தள்ளுபடி, புதிதாக கடன் வழங்குவதற்காக ரூ.10 ஆயிரம் கோடி வழங்குதல், 2 ஆயிரம் மின்சார பஸ்கள் இயக்குதல் உள்ளிட்டவை வரவேற்கத்தக்க அறிவிப்புகளாக உள்ளன. அதே நேரத்தில் கடந்த 5 ஆண்டுகளாக மத்திய அரசின் நிதி தமிழகத்துக்கு குறைந்து கொண்டே வருகிறது. புதிதாக ரூ.43 ஆயிரம் கோடி கடன் வாங்குவது, புதிய வேலைவாய்ப்பு திட்டங்கள் ஏதும் இல்லாமல் இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது.

தூத்துக்குடியை சேர்ந்த என்.பி.ராஜா:– நேரடி மற்றும் மறைமுக வரிகளை மக்கள், மத்திய, மாநில அரசுகளுக்கு சரியாக செலுத்தி வருகின்றனர். இந்த காலகட்டத்திலும் பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல் செய்தது தமிழக மக்களின் தலையில் கடன் சுமையை ஏற்றுவது போன்றதாகும். மேலும் திறமையற்ற நிர்வாகத்தை வெளிப்படுத்துகிறது.

Next Story