அரியலூர்- பெரம்பலூர் மாவட்டங்களில் மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்
அரியலூர்-பெரம்பலூர் மாவட்டங்களில் மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டது.
அரியலூர்,
தேசிய குடற்புழு நீக்க நாளையொட்டி நேற்று அரியலூர் மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் சார்பில் தேசிய குடற்புழு நீக்க முகாம் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி, கல்லூரிகள், தனியார் பள்ளி, கல்லூரிகள், அங்கன்வாடி மையங்களில் நடைபெற்றது. இதையொட்டி அரியலூர் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற குழந்தைகளுக்கான தேசிய குடற்புழு நீக்க முகாமினை மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தொடங்கி வைத்து 150 மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளையும், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களையும் வழங்கினார்.
அப்போது அவர் பேசுகையில், குடற்புழு நீக்க மாத்திரை வழங்குவதன் மூலம் குழந்தைகளுக்கு ரத்தசோகை வராமல் தடுக்கப்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது. அரியலூர் மாவட்டத்தில் 1 முதல் 19 வயதிற்கு உட்பட்ட 2 லட்சத்து 45 ஆயிரத்து 947 பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட உள்ளது. தேசிய குடற்புழு நீக்க நாளில் குடற்புழு நீக்க மாத்திரை பெற இயலாமல் விடுபட்ட குழந்தைகளுக்கு வருகிற 14-ந் தேதி சிறப்பு முகாம் மூலம் வழங்கப்பட உள்ளது.
இதில் துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) டாக்டர் ஹேமசந்த்காந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 1 முதல் 19 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டது. மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரிகள், தனியார் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ- மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டது. பெரம்பலூர் முத்து நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் (வடக்கு) மாணவ- மாணவிகளுக்கு பெரம்பலூர் வட்டார மருத்துவ அதிகாரி டாக்டர் வசந்தா குடற்புழு மாத்திரைகளை வழங்கினார். மாத்திரைகளை பெற்ற மாணவ- மாணவிகள், அதனை உண்டனர்.
Related Tags :
Next Story