சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த விவசாயிக்கு 15 ஆண்டு சிறை தண்டனை பெரம்பலூர் மகிளா கோர்ட்டு தீர்ப்பு


சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த விவசாயிக்கு 15 ஆண்டு சிறை தண்டனை பெரம்பலூர் மகிளா கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 9 Feb 2019 4:30 AM IST (Updated: 8 Feb 2019 10:36 PM IST)
t-max-icont-min-icon

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த விவசாயிக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பெரம்பலூர் மகிளா கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

பெரம்பலூர், 

பெரம்பலூர் அருகே உள்ள பொம்மனப்பாடி கிழக்கு தெருவை சேர்ந்தவர் சுப்பையா. இவரது மகன் ராஜா (வயது 33). விவசாயி. இவர் கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் 6-ந் தேதி பொம்மனப்பாடியில் விளையாடி கொண்டிருந்த 9 வயது சிறுமியை அதே பகுதியில் உள்ள காட்டுக்குள் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.

பின்னர் நடந்த சம்பவத்தை யாரிடமும் சொல்லக்கூடாது என்றும், மீறி சொன்னால் கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். இருப்பினும் பாதிக்கப்பட்ட அந்த சிறுமி அழுதவாறு தனக்கு நடந்த கொடுமையை தனது தாயிடம் கூறினாள். அவரது தாய் இது தொடர்பாக பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் ராஜா ஜாமீனில் வெளியே வந்தார். இது தொடர்பான வழக்கு பெரம்பலூர் மாவட்ட மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது.

நேற்று இந்த வழக்கை விசாரித்த மகிளா கோர்ட்டு நீதிபதி விஜயகாந்த் தீர்ப்பு அளித்தார். சிறுமியை கடத்தி சென்றதற்காக ராஜாவுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதத் தொகை செலுத்த தவறினால் மேலும் 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், சிறுமிக்கு கொலை மிரட்டல் விடுத்ததற்காக 1 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், கட்டத் தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனையும், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக போக்சோ சட்டத்தின் கீழ் ராஜாவுக்கு அதிகபட்சமாக 15 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், கட்டத் தவறினால் மேலும் 3 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பை வழங்கினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு வழங்கும் இழப்பீடு தொகையை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு விரைந்து பெற்று தர வேண்டும் என உத்தரவிட்டார். இந்த சிறை தண்டனை அனைத்தையும் ராஜா ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டுமென நீதிபதி விஜயகாந்த் தனது தீர்ப்பில் கூறியிருந்தார்.

இதனால் ராஜாவுக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், மொத்தம் ரூ.15 ஆயிரம் அபராதமும், அபராத தொகை கட்டத்தவறினால் மேலும் 5 ஆண்டுகளும், 3 மாதமும் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி அளித்த தீர்ப்பில் கூறப்பட்டிருந்ததாக மகிளா கோர்ட்டு அரசு தரப்பு வக்கீல் வினோத்குமார் கூறினார்.

இதையடுத்து ராஜாவை போலீசார் கோர்ட்டில் இருந்து அழைத்து சென்று திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். தண்டனை விதிக்கப்பட்ட ராஜாவுக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story