அனைத்து ஒன்றியங்களிலும் அசோலா பசுந்தீவன உற்பத்தி திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் விவசாயிகள் கோரிக்கை


அனைத்து ஒன்றியங்களிலும் அசோலா பசுந்தீவன உற்பத்தி திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 9 Feb 2019 4:30 AM IST (Updated: 9 Feb 2019 12:08 AM IST)
t-max-icont-min-icon

அசோலா பசுந்தீவன உற்பத்தி திட்டத்தை மாவட்டத்தின் அனைத்து ஒன்றியங்களிலும் நிறைவேற்ற வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிருஷ்ணராயபுரம், 

கரூர் மாவட்டத்தில் காவிரி, அமராவதி என 2 ஆறுகள் ஓடினாலும், அதனால் பாசன வசதி பெற்று பயன் அடையும் விவசாயிகள் மிகவும் குறைவு. பருவ மழை குறைவு போன்ற காரணங்களால் மானாவாரி விவசாயம் பாதிக்கப்பட்டதுடன், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கிணறுகள் மூலம் தோட்ட விவசாயமும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு கவலையடைந்த விவசாயிகளுக்கு, கால்நடை வளர்ப்பு பயனுள்ளதாக இருந்தது. தற்போது மாவட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கறவை மாடுகள், செம்மறி ஆடுகள் வளர்ப்பை தொழிலாக மேற்கொண்டு வருகின்றனர்.

கால்நடை வளர்ப்போரின் தீவன செலவை குறைக்கவும், மாடுகளின் ஆரோக்கியத்தை பேணி பாதுகாக்கும் வகையிலும் தற்போது கிருஷ்ணராயபுரம், தோகைமலை ஒன்றியங்களில் அசோலா பசுந்தீவனம் உற்பத்தி தொட்டிகளை அரசு அமைத்து தருகிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.15 ஆயிரம் மதிப்பில் கிராம சபையின் ஒப்புதலோடு கால்நடை வளர்க்கும் விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு இந்த தொட்டிகள் கட்டித்தரப்படுகிறது.

இந்த தொட்டியில் குறைந்த அளவு தண்ணீர் தேக்கப்பட்டு அதில் அசோலா விதைகள் தூவப்படுகிறது. தூவிய 3 நாட்களுக்கு பிறகு நன்கு முளைத்து வளர தொடங்கும் அசோலாவை 15 நாட்களுக்கு பின் எடுத்து, கால்நடைகளுக்கு கொடுக்கிறார்கள். அவ்வாறு எடுத்த பின்னும் அசோலா தொடர்ந்து உற்பத்தியாகிறது. அசோலா மாடுகளுக்கு சத்தான தீவனம் என்பதுடன், விலைக்கு வாங்கி பயன்படுத்தும் மற்ற தீவனத்தின் தேவையும் குறைகிறது.

இதனை அறிந்து கால்நடை வளர்க்கும் மற்ற விவசாயிகள் பலரும், அரசு சார்பில் தொட்டி அமைத்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் பாலராஜபுரம் ஊராட்சி சின்னமநாயக்கன்பட்டியை சேர்ந்த கால்நடை வளர்க்கும் விவசாயிகள் கூறுகையில், முதலில் இந்த அசோலா பசுந்தீவனம் உற்பத்தி பற்றி புரியாமையால், அரசு எங்களுக்கு தொட்டி அமைத்து தர வந்தபோது ஆர்வம் காட்டாமல் இருந்தோம். அதனால் எங்கள் பகுதியில் சிலருக்கு மட்டுமே அசோலா பசுந்தீவனம் வளர்ப்பு தொட்டி அமைத்து தரப்பட்டது. தற்போது அதன் பயனை அறிந்து, தொட்டி அமைத்து தரக்கோரி அரசுக்கு விண்ணப்பம் வழங்கி வருகிறோம், என்றனர். மேலும் அசோலா பசுந்தீவனம் உற்பத்தி தொட்டி அமைக்கும் திட்டத்தை அனைத்து ஒன்றியங்களிலும் விரைந்து நிறைவேற்ற அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story