உளுந்தூர்பேட்டை அருகே சுங்கச்சாவடி மையத்தில் லாரி கவிழ்ந்தது


உளுந்தூர்பேட்டை அருகே சுங்கச்சாவடி மையத்தில் லாரி கவிழ்ந்தது
x
தினத்தந்தி 8 Feb 2019 10:30 PM GMT (Updated: 8 Feb 2019 7:11 PM GMT)

உளுந்தூர்பேட்டை அருகே சுங்கச்சாவடி மையத்தில் லாரி கவிழ்ந்தது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

உளுந்தூர்பேட்டை, 

காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டில் இருந்து நேற்று காலை லாரி ஒன்று திருச்சி நோக்கி புறப்பட்டது. லாரியை செங்கல்பட்டு அடுத்துள்ள புலிப்பட கோவில் பகுதியை சேர்ந்த சிவானந்தம்(வயது 22) என்பவர் ஓட்டினார். அந்த லாரி விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த செங்குறிச்சி திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தறிகெட்டு ஓடியவாறு சுங்கச்சாவடி மையம் முன்பு உள்ள வேகத்தடையில் ஏறி பாய்ந்தபடி வந்து தலைகுப்புற கவிழ்ந்தது.

லாரி பாய்ந்து வருவதை பார்த்ததும், அங்கு பணியில் ஈடுபட்டிருந்த சுங்கச்சாவடி மைய ஊழியர்கள் அலறி அடித்தபடி அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதற்கிடையே விபத்துக்குள்ளான லாரியின் டேங்கில் இருந்து டீசல் வெளியேறியது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை தீயணைப்புத்துறையினர் மற்றும் உளுந்தூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்துக்குள்ளான லாரி தீ பற்றாதவாறு ரசாயனத்தை தெளித்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளில் ஈடுபட்டனர். இதையடுத்து விபத்துக்குள்ளான லாரி அப்புறப்படுத்தப்பட்டது.

மேலும் இந்த விபத்தில் லாரியை ஓட்டி வந்த சிவானந்தம் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதைபார்த்த சுங்கச்சாவடி ஊழியர்கள் ஓடிவந்து விபத்தில் சிக்கிய சிவானந்தத்தை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story