கடன் தொல்லையால் மனைவியுடன் போலீஸ்காரர் வி‌ஷம் குடித்து தற்கொலை முயற்சி ஈரோட்டில் பரபரப்பு


கடன் தொல்லையால் மனைவியுடன் போலீஸ்காரர் வி‌ஷம் குடித்து தற்கொலை முயற்சி ஈரோட்டில் பரபரப்பு
x
தினத்தந்தி 9 Feb 2019 4:45 AM IST (Updated: 9 Feb 2019 2:44 AM IST)
t-max-icont-min-icon

கடன் தொல்லையால் மனைவியுடன் போலீஸ்காரர் வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு,

ஈரோடு பூந்துறை ரோடு ஸ்ரீநகரை சேர்ந்தவர் பூமலை (வயது 31). இவர் ஈரோடு வடக்கு போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவரது சொந்த ஊர் சேலம் மாவட்டம் தம்மநாயக்கன்பட்டி ஆகும்.

பூமலையின் மனைவி கலைச்செல்வி (26). இவர்களுக்கு 6 வயதில் பெண் குழந்தை உள்ளது. பூமலை சொந்த செலவிற்காக பலரிடம் கடன் வாங்கியதால், கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் –மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினமும் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து பூமலை வெளியிலும், மகள் விளையாடவும் சென்று விட்டனர். மனம் உடைந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த கலைச்செல்வி வி‌ஷத்தை குடித்துவிட்டார்.

வெளியில் சென்ற பூமலை வீடு திரும்பியபோது மனைவி வி‌ஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்ததுடன் அவரும் வி‌ஷத்தை குடித்தார். இதனால் 2 பேரும் மயங்கியபடி கிடந்துள்ளனர்.

இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதல் உதவி சிகிச்சைபெற்ற பின்னர் கணவன் –மனைவி 2 பேரும் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் 2 பேருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

போலீஸ்காரர் தனது மனைவியுடன் வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story