வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தில் கணக்கெடுக்கும் பணி நிறைவு 81 வகை பறவைகள் உள்ளதாக அதிகாரிகள் தகவல்


வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தில் கணக்கெடுக்கும் பணி நிறைவு 81 வகை பறவைகள் உள்ளதாக அதிகாரிகள் தகவல்
x
தினத்தந்தி 9 Feb 2019 4:00 AM IST (Updated: 9 Feb 2019 2:44 AM IST)
t-max-icont-min-icon

வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தில் நடந்த கணக்கெடுக்கும் பணி முடிவடைந்தது. 81 வகை பறவைகள் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னிமலை,

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமாக வெள்ளோடு பறவைகள் சரணாலயம் உள்ளது. 215 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த சரணாலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை பறவைகளுக்கான சீசன் தொடங்கும்.

இதுபோன்ற காலங்களில், இந்த சரணாலயத்திற்கு பெலிகான், கொசு உல்லான், வண்ணான் நாரை, கூழைகெடா, பெரிய நீர்காகம், பாம்புதாரா, சாம்பல் நாரை, வெண்மார்பு மீன்கொத்தி பறவை, ஜெம்புகோரி உள்ளிட்ட பறவைகள் வந்து செல்கின்றன.

இதில், கூழைகெடா ரக பறவை ஆஸ்திரேலியாவில் இருந்தும், கொசு உல்லான் பறவை சைபீரியாவில் இருந்தும் வருகிறது. ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக கடும் வறட்சியால் சரணாலய ஏரி வறண்டு போனது. இந்த ஆண்டு கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் சென்றதால் ஏரி நிரம்பியது. இதனால் பறவைகள் வரத் தொடங்கின.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தில் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது. வனத்துறை அலுவலர்கள், தொண்டு நிறுவன பிரதிநிதிகள், பறவை ஆர்வலர்கள் என 5 குழுக்களாக 25 பேர் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

கணக்கெடுப்பு பணி முடிந்து குழுவினர் கூறும்போது, ‘சரணாலயத்தில் தற்போது 81 வகையான பறவைகள் இருக்கிறது. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் மரங்களிலும், நிலத்திலும் கூடுகள் கட்டி இனப்பெருக்கம் செய்துள்ளன.

இந்த ஆண்டு ரோஸி சார்லிங் என்ற பறவை இனம் மிக அதிகமாக உள்ளது. தரை பகுதியில் கூடு கட்டி இனப்பெருக்கம் செய்யும் ஸ்பாட் பில்டெக், புள்ளி மூக்கு வாத்து, நாமக்கோழி, முக்குழிப்பான் போன்ற பறவைகளின் குஞ்சுகளும், மரத்தில் கூடு கட்டி வாழும் சாம்பல் நிற நாரை, ரா கொக்கு, சிறிய நீர் காகம், உண்ணி கொக்கு, வெள்ளை அரிவாள் மூக்கன், கரண்டிவாயன் ஆகிய பறவை இனங்களின் குஞ்சுகளும் அதிக அளவில் காணப்படுகின்றன‘ என்றனர்.

மாவட்ட வன அதிகாரி விஸ்மிஜூ விஸ்வநாதன், வனச்சரகர் ரவீந்திரன், வனக்காப்பாளர் விஜயகுமார் மற்றும் வனவர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் இந்த கணக்கெடுப்பு பணியில் கலந்து கொண்டார்கள்.


Next Story