உத்திரமேரூர் அருகே பஸ் மீது லாரி மோதல்; ஆசிரியை பலி கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியால் பரபரப்பு


உத்திரமேரூர் அருகே பஸ் மீது லாரி மோதல்; ஆசிரியை பலி கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியால் பரபரப்பு
x
தினத்தந்தி 9 Feb 2019 3:45 AM IST (Updated: 9 Feb 2019 2:54 AM IST)
t-max-icont-min-icon

பஸ்சின் பக்கவாட்டில் ஒரு லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் பஸ்சுக்கும், லாரிக்கும் இடையில் சிக்கி தனியார் பள்ளி ஆசிரியை உயிரிழந்தார். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உத்திரமேரூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூரை அடுத்த இரட்டைமங்கலத்தை சேர்ந்தவர் ராபின். இவரது மனைவி சோபியா (வயது 40). இவர் செங்கல்பட்டில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக வேலைபார்த்து வந்தார். கடந்த 6-ந் தேதி செங்கல்பட்டு செல்வதற்காக நெல்வாய் கூட்ரோடு பகுதிக்கு வந்தார். அவரை பஸ் ஏற்றிவிடுவதற் காக அவரது கணவரும் உடன் சென்றார்.

அப்போது அந்த வழியாக வந்த பஸ்சில் ஏறுவதற்காக சோபியா சென்றார். அப்போது அந்த வழியாக வந்த லாரி திடீரென ஒரு மொபட் மீது மோதியது. பின்னர் அந்த லாரி பஸ் மீது மோதியது. இதில், பஸ்சுக்கும், லாரிக்கும் இடையே சோபியா சிக்கிக்கொண்டார். தன் கண்முன்னே மனைவி விபத்தில் சிக்கியதை பார்த்த ராபின் அதிர்ச்சி அடைந்தார். ஆனால் மொபட்டில் சென்றவர் காயங்களின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

உடனடியாக அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சோபியாவை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சோபியா உயிரிழந்தார். பஸ் மீது லாரி மோதிய உடன் லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார்.

இதுபற்றி தகவல் அறிந்த சாலவாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். லாரியில் பிரேக் பிடிக்காததே விபத்துக்கு காரணம் என போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் இருந்த கடை ஒன்றின் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பஸ்நிறுத்தத்தில் அரசு பஸ் நிற்காமல் சந்திப்பு பகுதியில் பஸ்சை டிரைவர் நிறுத்தியதே விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.

இந்த வழியாக அரசு பஸ்சை ஓட்டிவரும் டிரைவர்கள் பஸ் நிறுத்தத்தில் பஸ்சை நிறுத்தாமல் சந்திப்பு பகுதியில்தான் நிறுத்துவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த பகுதியில் கல்குவாரிகள் அதிகம் இருப்பதால் லாரிகளும் அதிவேகமாக வருவதால் இதுபோன்று அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிர் பலி ஏற்படுவதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

Next Story