திருப்பூர் வரும் பிரதமர் மோடிக்கு எதிராக வைகோ தலைமையில் கருப்புக்கொடி போராட்டம் ம.தி.மு.க. மாநில அவைத்தலைவர் துரைசாமி பேட்டி
திருப்பூர் வரும் பிரதமர் மோடிக்கு எதிராக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் கருப்புக்கொடி போராட்டம் நாளை நடத்தப்படும் என்று அவைத்தலைவர் துரைசாமி கூறினார்.
திருப்பூர்,
பிரதமர் நரேந்திர மோடி நாளை(ஞாயிற்றுக்கிழமை) திருப்பூர் வருகிறார். பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ம.தி.மு.க. சார்பில் கருப்புக்கொடி போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநில அவைத்தலைவர் துரைசாமி நேற்று திருப்பூரில் நிருபர்களிடம் கூறியதாவது:–
பிரதமர் நரேந்திர மோடி நாளை(ஞாயிற்றுக்கிழமை) அரசு விழா மற்றும் கட்சியின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள திருப்பூர் வருகிறார். ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் பிரதமருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் திருப்பூர் புதிய பஸ் நிலையம் அருகே நாளை மதியம் 1 மணி அளவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்க உள்ளனர்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதிகளை பிரதமர் பார்க்க வரவில்லை. ஆனால் அரசு விழா என்ற பெயரில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்துக்கு வருகிறார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள திட்டங்களை அவர் திருப்பூரில் இருந்து தொடங்கிவைக்கிறார். எங்களது கருப்புக்கொடி போராட்டத்துக்கு போலீசார் அனுமதி கொடுக்கவில்லை. இருப்பினும் தடையை மீறி போராட்டம் நடக்கும்.
பா.ஜனதா சார்பில் திருப்பூரில் வைக்கப்பட்ட விளம்பர தட்டிகளில் கருப்புக்கொடி போராட்டம் நடத்துபவர்களுக்கு எதிரான வாசகங்களை அச்சிட்டுள்ளனர். இதற்கு போலீசார் எப்படி அனுமதி வழங்கினார்கள் என்று தெரியவில்லை. ம.தி.மு.க. சார்பில் விளம்பர பலகை வைப்பதற்கு அனுமதி கொடுக்காத போலீசார் பா.ஜனதாவுக்கு மட்டும் அனுமதி வழங்கியுள்ளனர். இதுதொடர்பாக ம.தி.மு.க. சார்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்படும்.
திருப்பூரில் இ.எஸ்.ஐ. மருத்துவமனை கட்டுவதற்கு பிரதமர் அடிக்கல் நாட்ட உள்ளதாக தெரியவருகிறது. ஆனால் கடந்த 2005–ம் ஆண்டு ம.தி.மு.க. தொழிற்சங்க மாநாடு திருப்பூரில் நடந்தபோதே அப்போதைய மத்திய மந்திரி சந்திரசேகர ராவ் மாநாட்டில் கலந்து கொண்டு திருப்பூருக்கு இ.எஸ்.ஐ. மருத்துவமனையை அறிவித்தார். ஆனால் இதுவரை இ.எஸ்.ஐ. மருத்துவமனை கட்டுவதற்கான இடப்பிரச்சினை கூட தீராமல் இருக்கிறது. எனவே ஏற்கனவே அறிவித்த திட்டத்துக்குத்தான் பிரதமர் அடிக்கல் நாட்ட உள்ளதாக நாங்கள் கருதுகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது மாநகர் மாவட்ட செயலாளர் சிவபாலன், தலைவர் நாகராஜன், புறநகர் மாவட்ட செயலாளர் மாரியப்பன், முன்னாள் எம்.பி. கிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.