சப்-கலெக்டர் வராததால் முகாமை புறக்கணித்து மாற்றுத்திறனாளிகள் போராட்டம்


சப்-கலெக்டர் வராததால் முகாமை புறக்கணித்து மாற்றுத்திறனாளிகள் போராட்டம்
x
தினத்தந்தி 9 Feb 2019 4:15 AM IST (Updated: 9 Feb 2019 3:15 AM IST)
t-max-icont-min-icon

வேடசந்தூர் அருகே முகாமுக்கு சப்-கலெக்டர் வராததால் முகாமை புறக்கணித்து மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வேடசந்தூர், 

வேடசந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், பழனி ஆகிய தாலுகாவை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடந்தது. இந்த முகாமில், பழனி சப்-கலெக்டர் அருண்ராஜ் பங்கேற்று மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற உள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் சப்-கலெக்டர் முகாமில் பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக மதுவிலக்கு உதவி ஆணையர் கமலக்கண்ணன் கலந்து கொண்டு மனுக்களை பெற்றார். இதனால் ஆத்திரம் அடைந்த முகாமுக்கு வந்திருந்த மாற்றுத்திறனாளிகள் சிலர், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்க திண்டுக்கல் மாவட்ட செயலாளர் பகவத்சிங் தலைமையில் முகாமை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறிது நேரம் கோஷமிட்ட அவர்கள் பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

அதன்பிறகு தொடர்ந்து மனுக்கள் பெறப்பட்டன. இந்த முகாமில் மொத்தம் 146 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி வைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். முகாமில் தாசில்தார் சுரேஷ்கண்ணன், துணை தாசில்தார், சிவசுப்பிரமணியன், மாற்றுத்திறனாளிகள் மாவட்ட அலுவலர் சாமிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

முன்னதாக பகவத்சிங் நிருபர்களிடம் கூறுகையில், ‘வருவாய் நிர்வாக ஆணையர் உத்தவுரவுப்படி கலெக்டர், சப்-கலெக்டர், தலைமையில் மாதத்துக்கு 2 முறை மாற்றுத்திறனாளிகள் முகாமை நடத்தி குறைகளை தீர்க்க வேண்டும் என்று அரசாணை உள்ளது. ஆனால் அவர்கள் முறையாக கலந்து கொள்ளவில்லை. முகாமுக்கு வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு போதுமான அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதில்லை. இதுமட்டுமின்றி மனு அளித்தவர்களுக்கு ஒப்புகை சீட்டும் வழங்குவதில்லை. பழனி சப்-கலெக்டர் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் முகாமை புறக்கணித்து வருகிறார்’ என்றார்.

Next Story