கள்ளத்துப்பாக்கி விற்பனை விவகாரம்: முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையில் பதில் மனு தாக்கல் செய்யாதது ஏன்? சி.பி.ஐ. க்கு மதுரை ஐகோர்ட்டு கேள்வி
தமிழகத்தில் கள்ளத்துப்பாக்கி விற்பனை அதிகரித்தது தொடர்பான முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையில் பதில் மனு தாக்கல் செய்யாதது ஏன் என்று சி.பி.ஐ. க்கு மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
மதுரை,
தமிழகத்தில் கள்ளத்துப்பாக்கி விற்பனை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு கள்ளத்துப்பாக்கி விற்பனை செய்ததாக சென்னை, திருச்சியில் காவலர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். இந்திய ஆயுத தடை சட்டத்தின் படி முறையான உரிமம் பெற்றவர்களே துப்பாக்கி வைத்திருக்கலாம். ஆனால் சமீபகாலமாக கள்ளத்துப்பாக்கி புழக்கம் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. வட மாநிலங்களிலேயே கள்ளத்துப்பாக்கி வழக்கம் அதிகமிருந்த நிலையில், தற்போது தமிழகத்திலும் அதிகரித்து வருவது அச்சத்தை ஏற்படுத்துகிறது. அதிலும் வட மாநிலங்களிலிருந்து ரெயில் மற்றும் பஸ்களில் கள்ளத்துப்பாக்கிகள் கொண்டுவரப்பட்டு சில அரசியல்வாதிகள், வக்கீல்கள் உள்ளிட்டோருக்கு விற்பனை செய்வதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
சில நாட்களுக்கு முன்பு ரெயிலில் 20 ரவுண்ட் தோட்டாக்களை கொண்ட துப்பாக்கியுடன் 2 பேர் கைது செய்யப்பட்டதும், சென்னையை சேர்ந்த காவலர் பரமேசுவரன் மற்றும் தஞ்சாவூரை சேர்ந்த நாகராஜன், சிவா ஆகியோரும் கள்ளத்துப்பாக்கி விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்ட நிகழ்வும் நடைபெற்றது.
அவர்களை விசாரித்ததில் இதற்கு முன்பு முன்னிலை அரசியல்வாதிகள், வக்கீல்கள், தொழில் அதிபர்கள் பலருக்கும் இதுபோல சட்ட விரோத மற்றும் உரிமம் இல்லாத துப்பாக்கியை விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதுபோன்ற நிகழ்வுகள் பொதுமக்களின் பாதுகாப்பிற்கும், அமைதிக்கும் அச்சத்தை விளைவிக்கும் வகையில் உள்ளன.
ஆகவே, இவற்றை முடிவுக்கு கொண்டுவர சட்டவிரோத, உரிமம் இல்லாத கள்ளத்துப்பாக்கி விற்பனை தொடர்பான வழக்கு விசாரணையை தேசிய புலனாய்வு பிரிவிற்கு மாற்றவும், அது குறித்து குறிப்பிட்ட கால இடைவெளியில் அவர்கள் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு கடந்த 2018–ம் ஆண்டு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் கோரிக்கை குறித்து, மத்திய உள்துறை செயலாளர், தேசிய புலனாய்வு முகமை, சி.பி.ஐ. ஆகியோர் பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
இந்தநிலையில் இந்த மனு நேற்று மீண்டும் நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், கள்ளத் துப்பாக்கி விவகாரத்தில், சட்டம்–ஒழுங்கு பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. நாட்டில் அமைதியின்மை ஏற்பட வாய்ப்புள்ளது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையில், ஏன் இதுவரை பதில் மனு தாக்கல் செய்யவில்லை என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதைத்தொடர்ந்து இதுகுறித்து மத்திய உள்துறை செயலாளர், தேசிய புலனாய்வு முகமை, சி.பி.ஐ. ஆகியவற்றில் உள்ள உயர் அதிகாரிகள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். தவறும்பட்சத்தில் பதில் மனு தாக்கல் செய்யாதவர்களுக்கு சம்மன் அனுப்ப உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் வழக்கின் விசாரணையை வருகிற 22–ந்தேதிக்கு ஒத்தி வைத்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.