ராகுல் காந்தி பிரதமரானால் புதுச்சேரி மாநிலத்திற்கு 90 சதவீதம் நிதி கிடைக்கும் அமைச்சர் கந்தசாமி பேச்சு


ராகுல் காந்தி பிரதமரானால் புதுச்சேரி மாநிலத்திற்கு 90 சதவீதம் நிதி கிடைக்கும் அமைச்சர் கந்தசாமி பேச்சு
x
தினத்தந்தி 9 Feb 2019 5:00 AM IST (Updated: 9 Feb 2019 4:36 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ராகுல் காந்தி பிரதமரானால் புதுச்சேரி மாநிலத்துக்கு 90 சதவீத நிதி மத்தியில் இருந்து மானியமாக கிடைக்கும் என்று அமைச்சர் கந்தசாமி கூறினார்.

பாகூர்,

பாகூர் தொகுதியை சேர்ந்த விதவையர், கணவனால் கைவிடப்பட்டோர், முதியோர், பாலூட்டும் தாய்மார்கள் உள்ளிட்டோருக்கு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மூலம் முதல்–அமைச்சர் நிவாரண நிதி திட்டங்களின் கீழ் ஓய்வூதியம் மற்றும் நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி பாகூரில் நடந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு தனவேலு எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் அமைச்சர் கந்தசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 272 பயனாளிகளுக்கு நிதி உதவிகள் வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:–

புதுச்சேரி அரசு மகளிர் மேம்பாட்டு கழகத்தின் சார்பாக புதுச்சேரி மாநிலத்தில் 10 ஆயிரம் பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் இறந்தவர்களுக்கு ஈமச்சடங்கு செய்ய ரூ.15 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. அதுபோல், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பிற இன ஏழை மக்கள் இறந்தால் ரூ.10 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. இந்த நிதி எம்.எல்.ஏ.க்கள் மூலம் உடனடியாக வழங்கப்பட உள்ளது.

சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக எங்களால் பெரிய அளவில் எதுவும் செய்ய முடிவில்லை. காரணம் அரசுக்கு வருமானமும் இல்லை, அதிகாரமும் இல்லை. கடந்த என்.ஆர்.காங்கிரஸ் அரசு புதுவை மாநிலத்துக்கென தனி கணக்கு தொடங்கியதாலும், அதன் மூலம் கடனை அடைத்து வருவதாலும் அரசுக்கு நிதி தட்டுப்பாடு உள்ளது. இருந்த போதிலும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை நிறுத்தவும் மனமில்லை. அரசு சார்பு நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் 15 ஆயிரம் பேருக்கு 30 மாதம் சம்பளம் வழங்கப்படவில்லை. அதற்காக மத்திய அரசிடம் கூடுதல் நிதி கேட்டால், 15 ஆயிரம் பேரை வேலையைவிட்டு நிறுத்திவிடுங்கள் என்கின்றனர்.

இதை எதற்காக சொல்கிறேன் என்றால், நாடாளுமன்ற தேர்தலுக்காக இன்னும் ஒரு மாதத்தில் நாங்கள் வீடு தேடி வருவோம். தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்று பெற்று ராகுல் காந்தி பிரதமர் ஆவார். புதுச்சேரியில் வெற்றி பெறும் காங்கிரஸ் உறுப்பினர் மத்திய அமைச்சராக வருவார்.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது 90 சதவீதம் மத்திய அரசின் நிதியும் 10 சதவீதம் மாநில அரசின் நிதியும் கொண்டு பல நலத்திட்டங்கள் செய்து வந்தோம். தற்போது பாரதீய ஜனதா கட்சி ஆட்சியில் நமது மாநிலத்துக்கு 26 சதவீதம்தான் நிதி வருகிறது. ராகுல் காந்தி பிரதமரானால், புதுச்சேரி மாநிலத்திற்கு 90 சதவீதம் நிதி மானியமாக கிடைக்கும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் உறுப்பினருக்கு அதிகபட்ச வாக்குகளை பாகூர் தொகுதி மக்கள் அளித்திட வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் கந்தசாமி பேசினார்.


Next Story