பா.ஜனதா நிர்வாகியை கைது செய்த போலீஸ் இந்து மதத்தை இழிவுபடுத்தி ஓவியம் வரைந்தவரை கைது செய்யாதது ஏன்?
பா.ஜனதா நிர்வாகியை கைது செய்த போலீஸ், இந்து மதத்தை இழிவு படுத்தி ஓவியம் வரைந்தவரை கைது செய்யாதது ஏன்? என்று எச்.ராஜா கேள்வி எழுப்பினார்.
கடலூர் முதுநகர்,
பா.ஜனதா தொழிலாளர் பேரியக்க தேசிய செயலாளர் கல்யாணராமன், ஒரு சமூகத்தை பற்றி முகநூலில் பதிவு செய்திருந்தார். இதையடுத்து அவரை சென்னை போலீசார் கைது செய்து, கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இவரை பார்ப்பதற்காக பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா நேற்று கடலூருக்கு வந்தார்.
மத்திய சிறையில் கல்யாணராமனை சந்தித்து பேசிய பின்னர், எச்.ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
முகநூலில் கல்யாணராமன் ஏதோ ஆட்சேபகரமான பதிவு செய்ததாக கூறி, சர்வதேச தீவிரவாதியை கைது செய்வது போல் விமான நிலையத்தில் இருந்து இறங்கியபோது, அவரை போலீசார் கைது செய்துள்ளனர். எழுதுவதற்கும், சமூக வலைதளத்தில் பதிவு செய்யவும் அனைவருக்கும் கருத்துரிமை இருக்கிறது. கல்யாணராமன் தலைக்கு புழல் சிறையில் ரூ.5 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று கோர்ட்டிலேயே அரசு வக்கீல் கூறுகிறார். அப்படியானால் ரூ.5 லட்சம் விலையை நிர்ணயம் செய்தவர் யார்?, அவரை ஏன் இதுவரை கைது செய்யவில்லை?.
கல்யாணராமன் விவகாரத்தில் முனைப்பு காட்டிய போலீசார், சென்னை லயோலா கல்லூரியில் இந்து மதத்தையும், பாரத மாதா மற்றும் பிரதமரையும் இழிவுபடுத்தி ஓவியம் வரைந்த ஓவியர் முகிலன் மற்றும் கல்லூரி முதல்வரை கைது செய்யாதது ஏன்?. ஓவியம் வரைந்த இடத்தில் இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?.
புழல் சிறை நிலை என்ன என்று எனக்கு தெரியும். கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, தண்டனை பெற்ற கைதிகளுக்கு மெத்தை, டி.வி., ஏ.சி., ஸ்மார்ட் போன் ஆகியவை உள்ளே செல்லும். இவ்வளவு துரிதமாக கல்யாணராமனை கைது செய்தவர்கள், சிறைத்துறை அதிகாரிகள் ஒருவரை கூட பணியிடை நீக்கம் செய்யவில்லை. காவல்துறையில் கருப்பு ஆடுகள் உள்ளது. அவர்கள் மீது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சினிமாவில் இருந்து அரசியலுக்கு வருபவர்கள் பற்றி நிருபர்கள் கேட்ட போது, கனவுகள் குதிரையானால் பிச்சைக்காரர்கள் கூட சவாரி செய்வார்கள் என்றார்.
Related Tags :
Next Story