லக்கேஜ் அறையில் பயணித்ததால் பூட்டினர்: ரெயில் பெட்டிக்குள் 6 மணி நேரம் சிக்கி தவித்த போலீஸ்காரர் மதுரைக்கு வந்தவர் நெல்லையில் இறங்கினார்


லக்கேஜ் அறையில் பயணித்ததால் பூட்டினர்: ரெயில் பெட்டிக்குள் 6 மணி நேரம் சிக்கி தவித்த போலீஸ்காரர் மதுரைக்கு வந்தவர் நெல்லையில் இறங்கினார்
x
தினத்தந்தி 9 Feb 2019 10:00 PM GMT (Updated: 9 Feb 2019 1:25 PM GMT)

சென்னை–நெல்லை சுவிதா எக்ஸ்பிரஸ் ரெயிலில் லக்கேஜ் அறையில் பயணித்த போலீஸ்காரர் உள்ளே வைத்து பூட்டப்பட்டார்.

நெல்லை, 

சென்னை–நெல்லை சுவிதா எக்ஸ்பிரஸ் ரெயிலில் லக்கேஜ் அறையில் பயணித்த போலீஸ்காரர் உள்ளே வைத்து பூட்டப்பட்டார். இதனால் 6 மணி நேரம் பெட்டியில் சிக்கித்தவித்து மதுரைக்கு வந்த அவர் நெல்லையில் இறங்கினார்.

போலீஸ்காரர்

மதுரை மாவட்டம் சிம்மக்கல் பகுதியை சேர்ந்தவர் சாமுவேல் ராஜ் (வயது 27). இவர் சென்னையில் கமாண்டோ படை போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய உறவினர் ஒருவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவரை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் இரவு அவசரம் அவசரமாக மதுரைக்கு புறப்பட்டார். சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்துக்கு வந்தவர் அங்கிருந்து இரவு 10.15 மணிக்கு புறப்பட்ட சென்னை–நெல்லை சுவிதா ரெயிலில் ஏறி பயணம் செய்ய முடிவு செய்தார்.

அவர் முன்பதிவு இல்லாத டிக்கெட்டை எடுத்து ரெயிலின் கடைசி பகுதியில் இணைக்கப்பட்டிருந்த முன்பதிவு இல்லாத பெட்டியில் ஏறச்சென்றார். ஆனால் அந்த பெட்டியில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அப்போது அந்த பெட்டியுடன் இணைக்கப்பட்டிருந்த லக்கேஜ் அறை திறந்து கிடந்தது. இதையடுத்து சில பயணிகள் அந்த அறைக்குள் ஏறி அமர்ந்தனர். இதைக்கண்ட போலீஸ்காரர் சாமுவேல் ராஜூம் அந்த அறையில் ஏறி, அவர்களுடன் இணைந்து பயணம் செய்தார்.

பெட்டிக்குள் சிக்கினார்

இந்த நிலையில் சுவிதா ரெயில் திருச்சிக்கு அதிகாலை 4.30 மணி அளவில் வந்தது. அப்போது லக்கேஜ் அறையில் பயணம் செய்த பயணிகள் இறங்கிச் சென்று விட்டனர். திருச்சி ரெயில் நிலையத்தில் இருந்த ரெயில்வே ஊழியர், அனைத்து பயணிகளும் இறங்கி விட்டதாக கருதி லக்கேஜ் அறை கொண்ட பெட்டி கதவை பூட்டினார்.

ஆனால், உள்ளே தூங்கிக்கொண்டு இருந்த சாமுவேல்ராஜ் சிறிது நேரம் கழித்து கண் விழித்து எழுந்ததும் அதிர்ச்சி அடைந்தார். தன்னுடன் பயணித்த பயணிகளை காணவில்லை, மேலும் லக்கேஜ் அறை கதவும் பூட்டப்பட்டிருந்தது. உடனடியாக அவர் எழுந்து கதவை திறக்க முயற்சி செய்தும், பலன் அளிக்கவில்லை. அந்த அறை கதவு வெளிப்புறமாக பூட்டப்பட்டு இருந்தது.

இதையடுத்து அவர் கதவை திறக்க உதவி கோரி கூச்சலிட்டார். அருகில் இருந்த ரெயில்வே கார்டு மற்றும் பயணிகளை உதவிக்கு அழைத்தார். ஆனால் ஓடும் ரெயிலில் அவரது குரல் யாருக்கும் கேட்கவில்லை. இதனால் அவர் பெட்டிக்குள் சிக்கி தவித்தார்.

திறக்க மறுப்பு

இந்த நிலையில் அவர் இறங்க வேண்டிய மதுரை ரெயில் நிலையத்துக்கு காலை 7 மணிக்கு ரெயில் வந்தது. அப்போது சாமுவேல் ராஜ், தான் மாட்டிக்கொண்ட பெட்டிக்கதவை தட்டி கூச்சலிட்டார். இதை அறிந்த பயணிகள் அந்த கதவை திறக்க முயற்சி செய்தனர். அப்போது ரெயில்வே ஊழியர்கள் லக்கேஜ் பெட்டியில் பயணம் செய்தது தவறு. எனவே, அவரை திறந்து விடமுடியாது என்று மறுத்து விட்டனர்.

பின்னர் ரெயில் நெல்லை நோக்கி புறப்பட்டது. ஒவ்வொரு ரெயில் நிலையங்களில் ரெயில் நின்ற போதும் கதவை திறக்க அனுமதிக்கப்படவில்லை.

6 மணி நேரம் தவிப்பு

இந்த நிலையில் காலை 10.30 மணிக்கு அந்த ரெயில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு வந்து சேர்ந்தது. இதையடுத்து பரிதாபம் அடைந்த சில பயணிகள் லக்கேஜ் பெட்டிக்கதவை திறந்து விட்டனர். இதற்கும் ரெயில்வே ஊழியர்கள் எச்சரிக்கை விடுத்தனர். இருந்தபோதிலும் மனிதாபிமானத்துடன் சாமுவேல் ராஜை அவர்கள் மீட்டனர்.

பின்னர் அவரை குருவாயூர்–சென்னை எக்ஸ்பிரஸ் ரெயிலில் மதுரைக்கு அனுப்பி வைத்தனர். திருச்சியில் இருந்து நெல்லை வரை 6 மணி நேரம் சாமுவேல் ராஜ் வெளிச்சம், கழிப்பறை வசதி, போதிய காற்று வசதி இல்லாத பெட்டிக்குள் சிக்கி தவித்துள்ளார்.

லக்கேஜ் அறையில் ஏறியது ஏன்?

இதுகுறித்து சாமுவேல் ராஜ் கூறியதாவது:–

அவசரமாக மதுரைக்கு பயணம் செய்ய நேர்ந்ததால் சுவிதா எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறினேன். ரெயிலின் கடைசி பொதுபெட்டியில் முன்பதிவு இல்லாத 2 பெட்டிகள் இருக்கும் என்று கருதினேன். ஆனால் அந்த ரெயிலில் ஒரேயொரு முன்பதிவு இல்லாத பயணிகள் பெட்டி மட்டுமே இணைக்கப்பட்டு இருந்தது. அதிலும் பாதி பெட்டி லக்கேஜ் ஏற்றிச்செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. மீதி பாதி பெட்டி 3 பகுதியாக பிரிக்கப்பட்டு இருந்தது. மாற்றுத்திறனாளி இருக்கைகள், முன்பதிவு இல்லாத பயணிகள் இருக்கைகள் மற்றும் ரெயில் கார்டு அறை என 3 பிரிவாக இருந்தது. இதனால் 10 பயணிகள் லக்கேஜ் அறையில் ஏறி பயணம் செய்தனர். நான் 11–வது ஆளாக அந்த பெட்டியில் ஏறினேன். என்னை பெட்டிக்குள் வைத்து அடைத்தது மட்டுமல்லாமல், மனிதாபிமானம் இல்லாமல் ரெயில்வே கார்டு கதவை திறந்து விடவும் மறுத்து விட்டார். இதுதொடர்பாக மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்க உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினர்.


Next Story