நெல்லையில் வாக்குப்பதிவு எந்திரம் குறித்த விழிப்புணர்வு வாகன பிரசாரம் கலெக்டர் ஷில்பா தொடங்கி வைத்தார்
நெல்லையில் நடந்த வாக்குப்பதிவு எந்திரம் குறித்த விழிப்புணர்வு வாகன பிரசாரத்தை கலெக்டர் ஷில்பா தொடங்கி வைத்தார்.
நெல்லை,
நெல்லையில் நடந்த வாக்குப்பதிவு எந்திரம் குறித்த விழிப்புணர்வு வாகன பிரசாரத்தை கலெக்டர் ஷில்பா தொடங்கி வைத்தார்.
வாகன பிரசாரம்நெல்லை பாளையங்கோட்டை தாலுகா அலுவலக வளாகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்குப்பதிவு செய்வது குறித்து பொதுமக்களுக்கு பயிற்சி மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மின்னணு வாக்குபதிவு எந்திரம் செயல்விளக்க பயிற்சி வழங்கும் வாகன பிரசாரத்தை கலெக்டர் ஷில்பா நேற்று கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் கூறியதாவது:–
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி, நெல்லை மாவட்டத்தில் 10 சட்டசபை தொகுதிகளில் உள்ள வாக்காளர்களுக்கு நாடாளுமன்ற தேர்தலில், வாக்குப்பதிவு எந்திரத்தின் பயன்பாடு தொடர்பாக போதிய பயிற்சி மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
வாக்குப்பதிவு எந்திரங்கள்மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில், வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, ஒவ்வொரு தாலுகாவிலும் 7 குழுக்கள் வீதம் நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 68 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவில் துணை தாசில்தார் அளவில் 2 அலுவலர்களும், அவர்களுக்கு உதவியாக 2 அலுவலர்களும், ஆயுதம் ஏந்திய போலீசார் ஒருவரும் ஆக மொத்தம் 5 நபர்கள் உள்ளனர். இவர்கள் 5 பேரும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்துடன் பாதுகாப்பான வாகனத்தில் தினமும் காலை 8 மணிக்கு தாலுகா அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு சென்று வாக்குச்சாவடி மையங்களில் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், பொதுமக்களுக்கு மின்னணு எந்திரத்தில் வாக்களிப்பது தொடர்பாக செயல் விளக்க பயிற்சினை வழங்குவார்கள்.
மாதிரி வாக்குப்பதிவுஒவ்வொரு வாக்குச்சாவடி மையத்திலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மாதிரி வாக்குப்பதிவு நடத்தவும், வாக்களிப்பது சரிதானா? என்பதை சரிபார்க்க செய்யவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் சாந்தி (தேர்தல்), தேர்தல் தாசில்தார் தங்கராஜ், பாளையங்கோட்டை தாசில்தார் கந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.