சங்கரன்கோவில் அருகே கிராம மக்கள் திடீர் சாலைமறியல்
சங்கரன்கோவில் அருகே கிராம மக்கள் நேற்று திடீரென சாலைமறியல் செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சங்கரன்கோவில்,
சங்கரன்கோவில் அருகே கிராம மக்கள் நேற்று திடீரென சாலைமறியல் செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கோவில் கொடை விழாநெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா வடக்குபுதூர் கிராமத்தில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோவிலில் கொடை விழா நடந்து வருகிறது. விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலம் வடக்குபுதூர் பஸ்நிறுத்தம் அருகே உள்ள பிள்ளையார் கோவிலுக்கு சென்று திரும்பியபோது ஊர்வலத்தில் ஆடிப்பாடி வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் அப்பகுதியில் உள்ள மற்ற சமூகத்தினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் முளைப்பாரி ஊர்வலத்தில் வந்த இருளி என்ற மாற்றுத்திறனாளி பெண்ணின் தலையில் அடிபட்டு பலத்த காயமடைந்து, சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
சாலைமறியல்இதனை தொடர்ந்து சங்கரன்கோவில் தாலுகா போலீசார் இருதரப்பை சேர்ந்தவர்களை விசாரணைக்கு அழைத்து சென்றனர். கோவில் கொடை விழா நடத்தும் சமூகத்தினர், தாங்கள் முளைப்பாரி ஊர்வலம் மட்டுமே நடத்தியதாகவும், வேறு ஏதேனும் பிரச்சினையில் ஈடுபடவில்லை. அதனால் எங்கள் சமுதாயத்தினர் மீது போலீசார் விசாரணை என்ற பேரில் எங்கள் பகுதி மக்கள் மீது ஒரு தலைபட்சமாக செயல்படுவதாக கூறி வடக்குபுது£ர் மெயின் ரோட்டில் கிராம மக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்ததும் சங்கரன்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். புதிய தமிழக கட்சியின் மாவட்ட செயலாளர் இன்பராஜ் மற்றும் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் மறியலில் ஈடுபட்டவர்கள், போலீசார் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக கூறி மறியலை கைவிட மறுத்தனர். இதனால் போலீசார் அப்பகுதியில் போக்குவரத்தை மாற்றி விட்டனர்.
பின்னர் இச்சம்பவம் தொடர்பாக முழுமையாக விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என துணை சூப்பிரண்டு ராஜேந்திரன் உறுதி அளித்ததின் பேரில் அவர்கள் மறியலை கைவிட்டனர். இந்த சாலை மறியலால் சங்கரன்கோவில்– புளியங்குடி சாலையில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு, பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து வடக்குபுதூரில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.