குற்றாலத்தில் தமிழக–கேரள போலீசார் கலந்தாய்வு கூட்டம்


குற்றாலத்தில் தமிழக–கேரள போலீசார் கலந்தாய்வு கூட்டம்
x
தினத்தந்தி 9 Feb 2019 9:45 PM GMT (Updated: 9 Feb 2019 1:37 PM GMT)

தமிழக–கேரள போலீசார் கலந்தாய்வு கூட்டம் குற்றாலத்தில் நடந்தது.

தென்காசி, 

தமிழக–கேரள போலீசார் கலந்தாய்வு கூட்டம் குற்றாலத்தில் நடந்தது.

கலந்தாய்வு கூட்டம்

குற்றாலத்தில் உள்ள கேரள பொதுப்பணித்துறை விடுதியில் தமிழகம் மற்றும் கேரள போலீசார் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதை முன்னிட்டு இந்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் நெல்லை மாவட்டம் மற்றும் கேரள மாநிலம் கொல்லம் மாவட்ட போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் இரு மாநில எல்லைப் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது, பணம் கடத்தல் மற்றும் கேரள மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு அனுப்பப்படும் தடைசெய்யப்பட்ட பொருட்கள், மருத்துவ கழிவுகள் கொண்டு வருவதை தடை செய்வது, இரு மாநில எல்லைப்பகுதிகளில் உள்ள பிடி ஆணை பிறப்பிக்கப்பட்ட குற்றவாளிகள், இரு மாநிலத்திலும் தலைமறைவாக உள்ள குற்றவாளிகள் குறித்தும் அவர்களை கைது செய்வது உள்ளிட்ட பல்வேறு கட்ட பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைகள் நடத்தப்பட்டது.

கலந்து கொண்டவர்கள்

கூட்டத்தில் கொல்லம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அசோகன், நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார் மற்றும் இரு மாநில எல்லையோர பகுதிகளில் உள்ள போலீசார் கலந்து கொண்டனர். மேற்கண்ட ஆலோசனைகள் தொடர்பாக விரைவில் இரு மாநிலத்திலும் உள்ள அனைத்து துறை அதிகாரிகளையும் அழைத்து கூட்டம் நடத்தப்படும் என்று நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்தி குமார் தெரிவித்தார்.


Next Story