யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் கருவியுடன் மாதிரி வாக்குப்பதிவு விழிப்புணர்வு வாகனங்கள் மாவட்ட வருவாய் அலுவலர் தொடங்கி வைத்தார்
யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்து கொள்ளும் கருவியுடன் மாதிரி வாக்குப்பதிவு குறித்த விழிப்புணர்வு வாகனங்களை மாவட்ட வருவாய் அலுவலர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 1,271 வாக்குச் சாவடி மையங்கள் உள்ளன. இந்த வாக்குச் சாவடி மைங்களில் 2 ஆயிரத்து 372 வாக்கு சாவடிகள் உள்ளன. வருகிற நாடாளுமன்ற தேர்தலின்போது அனைத்து வாக்குச் சாவடிகளிலும் மின்னணு வாக்குப் பதிவு எந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த தேர்தலில் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை உறுதி செய்யும் கருவி புதிதாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இந்த நிலையில் வாக்குப் பதிவு எந்திரங்களின் நம்பகத் தன்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாதிரி வாக்குப்பதிவு நடத்த ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்துக்கும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம், கட்டுப்பாட்டு கருவி மற்றும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் கருவியுடன் கூடிய சிறப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளன.
அந்த வாகனங்களை நேற்று காலை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக அவர் வாக்காளர், தாம் அளித்த வாக்கினை உறுதிசெய்யும் கருவி மற்றும் மின்னணு வாக்குப் பதிவு எந்திரம் ஆகியவற்றை பார்வையிட்டார்.
இது குறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், ‘‘மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 6 வாகனங்கள் வீதம் 8 சட்டமன்றத் தொகுதிக்கு 48 விழிப்புணர்வு வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளது.
இந்த வாகனத்தில் 4 அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த அலவலர்கள் வாக்காளர்களிடையே வாக்குப்பதிவு எந்திரங்களின் செயல்பாடுகள் குறித்த நம்பகத் தன்மையும், மாதிரி வாக்குப் பதிவையும் நடத்தி காண்பிக்க உள்ளனர். இந்த நிகழ்ச்சிகள் வருகிற 13–ந் தேதி (புதன்கிழமை) வரை நடைபெற உள்ளது’’ என்றனர்.
நிகழ்ச்சியில் பயிற்சி கலெக்டர் பிரதாப், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட அலுவலர் ஜெயசுதா, திருவண்ணாமலை உதவி கலெக்டர் உமாமகேஸ்வரி, தேர்தல் பிரிவு தாசில்தார் முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.