யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் ஒப்புகை சீட்டு எந்திரம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் ஒப்புகை சீட்டு எந்திரம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
ஊட்டி,
இந்தியா முழுவதும் வருகிற மே மாதம் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் முழுவீச்சில் மேற்கொண்டு வருகிறது. கடந்த காலத்தில் இ.வி.எம். எனப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பொத்தானை அழுத்தி ஓட்டு போடும்போது, யாருக்கு ஓட்டு போட்டோம் என்பதை அறிய முடியாது. தற்போது யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் வகையில் வி.வி.பாட் எனப்படும் ஒப்புகை சீட்டு எந்திரம் முதல் முறையாக பயன்படுத்தப்படுகிறது.
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர் (தனி) ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் ஊட்டி-239, கூடலூர்(தனி)-221, குன்னூர்-223 வாக்குச்சாவடிகள் உள்ளன. நீலகிரியில் ஒப்புகை சீட்டு எந்திரத்தை கையாளுவது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று வாக்காளர்கள் தாம் அளித்த வாக்கினை உறுதி செய்யும் ஒப்புகை சீட்டு எந்திரம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஒரு தொகுதிக்கு 7 வாகனங்கள் வீதம் 3 தொகுதிகளுக்கு 21 பிரசார வாகனங்களை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி ஊட்டி தமிழகம் மாளிகையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா எந்திரத்தை பார்வையிட்டு பிரசார வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த வாகனங்களில் தேர்தல் பணியில் ஈடுபடும் வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, போலீசார் பணியில் இருப்பார்கள். அவர்கள் கிராமங்கள் தோறும் சென்று பொதுமக்களுக்கு எந்திரம் குறித்து முகாம் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள். நேற்று முதல் வருகிற 13-ந் தேதி வரை நடைபெறுகிறது.
வாக்காளர்கள் வாக்களிக்கும் பகுதிக்குள் நுழையும் போது தலைமை வாக்குச்சாவடி அலுவலர் வாக்குப்பதிவு எந்திரத்தை பதிவுக்கு தயார் நிலையில் வைப்பார். வாக்குப்பதிவு எந்திரத்தில் உள்ள விருப்ப வேட்பாளரின் பெயர், சின்னத்துக்கு எதிரே உள்ள நீலநிற பொத்தானை அழுத்தவும். வாக்களித்த வேட்பாளரின் பெயர், சின்னம் எதிரே சிவப்பு நிற விளக்கு ஒளிரும். வாக்காளர்கள் வாக்களித்த வேட்பாளரின் பெயர், சின்னம், வரிசை எண் உள்ளடக்கிய ஒப்புகை சீட்டு ரசீதை 7 நொடிகள் வரை பார்க்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி செல்வராஜ், துணை ஆட்சியர் முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story