தூக்கில் தொங்குவது போல் மாணவிக்கு ‘செல்பி’ அனுப்பிவிட்டு மாணவர் தற்கொலை ஒருதலை காதலில் விபரீத முடிவு


தூக்கில் தொங்குவது போல் மாணவிக்கு ‘செல்பி’ அனுப்பிவிட்டு மாணவர் தற்கொலை ஒருதலை காதலில் விபரீத முடிவு
x
தினத்தந்தி 10 Feb 2019 3:00 AM IST (Updated: 9 Feb 2019 11:06 PM IST)
t-max-icont-min-icon

ஒருதலை காதலில் மனமுடைந்த கல்லூரி மாணவர் தூக்கில் தொங்குவது போல் ‘செல்பி’ எடுத்து வாட்ஸ் அப்பில் மாணவிக்கு அனுப்பிவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சிங்காநல்லூர், 

கோவை சிங்காநல்லூர் சுப்பிரமணியம் பிள்ளை வீதியில் வசிப்பவர் சத்தியசீலன். பெயிண்டர். இவருடைய மகன் ஹரிகரசுதன் (வயது 20). இவர் கோவை ஈச்சனாரியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில் ஹரிகரசுதன் தனது கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்ததாக தெரிகிறது. பின்னர் அந்த மாணவியிடம் தனது காதலை தெரிவித்துள்ளார். அதற்கு அந்த மாணவி சம்மதம் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மாணவர் கடந்த சில நாட்களாக யாரிடமும் பேசாமல் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார்.

சம்பவத்தன்று மாணவரின் தந்தை சத்தியசீலன் கடலூர் சென்றிருந்தார். தாயார் சாவித்திரி வெளியே சென்றார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விரக்தியில் இருந்த கல்லூரி மாணவர் தற்கொலை செய்ய முடிவு எடுத்துள்ளார். இந்த முடிவை மாணவிக்கு தெரிவிக்க நினைத்தார்.

உடனே வீட்டின் உள்ள ஒரு அறையில் தாழிட்டு கொண்டு மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டார். பின்னர் மாணவர் தூக்கில் தொங்குவது போல ‘செல்பி‘ எடுத்துள்ளார். அதனை மாணவியின் வாட்ஸ் அப் எண்ணிற்கு அனுப்பினார்.

பின்னர் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இரவு வீடு திரும்பிய அவரது தாயார் சாவித்திரி, தனது மகன் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து கதறி அழுதார். இதனால் அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர்.

இந்த சம்பவம் குறித்து சிங்காநல்லூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலையடுத்து சிங்காநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தினர்.அப்போது அவர் செல்பி எடுத்து அனுப்பிய விவரம் தெரியவந்தது.

ஒருதலை காதலால் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story