கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் கலெக்டர் வழங்கினார்


கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் கலெக்டர் வழங்கினார்
x
தினத்தந்தி 10 Feb 2019 4:30 AM IST (Updated: 9 Feb 2019 11:09 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை கலெக்டர் பிரபாகர் வழங்கினார்.

கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தேசிய குடற்புழு நீக்கும் தினத்தையொட்டி மாணவிகளுக்கு அல்பெண்டசோல் 1 மாத்திரை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் பிரபாகர் தலைமை தாங்கி மாணவிகளுக்கு மாத்திரை வழங்கினார். சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் பிரியாராஜ் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் கலெக்டர் பிரபாகர் பேசியதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்த திட்டத்தின் கீழ் ஒரு வயது முதல் 19 வயது வரை உள்ள சுமார் 5 லட்சத்து 56 ஆயிரம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது. குடற்புழு தொற்றினால் ஊட்டச்சத்து குறைபாடு, சோர்வு, மற்றும் சுகவீனம், படிப்பில் கவனமின்மை, பசியின்மை, ரத்தசோகை, குமட்டல், வாந்தி ஆகியவை ஏற்படும். எனவே, குடற்புழு தொற்றிலிருந்து விடுபட அல்பெண்டசோல் மாத்திரைகளை உட்கொள்வது மிகவும் அவசியம்.

மதிய உணவு உண்டபின்பு அரை மணிநேரம் கழித்து இந்த மாத்திரைகள் வழங்கப்படும். இதனால் எந்தவிதமான பக்கவிளைவுகளும் ஏற்படாது. இந்த மாத்திரைகள் மாவட்டத்தில் உள்ள 1,796 அங்கன்வாடி மையங்களிலும், 1,745 அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் 316 தனியார் பள்ளிகளிலும் வழங்கப்பட உள்ளன.

1 வயது முதல் 2 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு அல்பெண்டசோல் அரை மாத்திரை வழங்கப்படும். 2 வயது முதல் 19 வயது வரை உள்ளவர்களுக்கு அல்பெண்டசோல் 1 மாத்திரை வழங்கப்படும்். பள்ளி செல்லா குழந்தைகளுக்கு அருகில் உள்ள அங்கன்வாடி மையத்தில் அல்பெண்டசோல் மாத்திரைகள் வழங்கப்படும்.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

Next Story