விதிகளை மீறும் எருது விடும் விழா குழு மீது கடும் நடவடிக்கை மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை


விதிகளை மீறும் எருது விடும் விழா குழு மீது கடும் நடவடிக்கை மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை
x
தினத்தந்தி 10 Feb 2019 4:15 AM IST (Updated: 9 Feb 2019 11:14 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விதிகளை மீறும் எருதுவிடும் விழா குழுவினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி, 

இது குறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்த ஆண்டு பொங்கல் முதல் எருதுவிடும் விழா நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை காவேரிப்பட்டணம், கூச்சக்கல்லூர், பழையூர், கும்மனூர், மருதேப்பள்ளி, அத்திகானூர், பாலேகுளி ஆகிய இடங்களில் அரசிடம் அனுமதி பெற்று எருதுவிடும் விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, ஜல்லிக்கட்டு, எருதுவிடும் விழா உள்ளிட்ட போட்டிகளில் நுழைவுக்கட்டணம் மற்றும் பரிசுத்தொகை வழங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி அனைத்து எருதுவிடும் விழா குழுவினரிடம், நுழைவுக்கட்டணம் மற்றும் பரிசுத்தொகை அறிவிப்பு கூடாது என்பது உள்ளிட்ட விதிமுறைகளுக்கு கட்டுப்படுவதாக உறுதிமொழி பத்திரம் பெற்று அனுப்பி அரசிடமிருந்து அரசிதழில் அனுமதி ஆணை வெளியிட்ட பிறகே எருதுவிடும் விழா நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்கிறது.

மேற்கண்ட விதிமுறைகளுக்கு மாறாக கடந்த 7-ந் தேதியன்று ஒரு கிராமத்தில் நடைபெற்ற எருது விடும் விழா நிகழ்ச்சியில் நுழைவுக்கட்டணம் மற்றும் பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளதாக வந்துள்ள உறுதியான தகவலின் அடிப்படையில் அந்த கிராமத்தில் எருதுவிடும் விழா குழுவினர் மீது மிருக வதை தடை சட்டத்தின் கீழ் உரிய போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இனி அரசு அனுமதி அளிக்கும் எருதுவிடும் விழா நிகழ்ச்சிகளில் எக்காரணத்தை கொண்டும் நுழைவுக்கட்டணம் வசூலிக்கக்கூடாது என்றும், பரிசுத்தொகை வழங்கக்கூடாது என்றும் எச்சரிக்கப்படுகிறது. மேலும் எருதுவிடும் விழாக்களில் காளைகள் எந்த கிராமத்திலிருந்து அழைத்து வரப்படுகிறதோ, அந்த பகுதியிலுள்ள கால்நடை மருத்துவரிடம் புகைப்படத்துடன் கூடிய சான்று பெற்று வந்தால் மட்டுமே அனுமதி அளிக்கப்படும். பசுக்களை எருதுவிடும் விழா நிகழ்ச்சியில் அனுமதிக்கக்கூடாது.

மேற்கூறிய விதிமுறைகளை முழுமையாக பின்பற்றினால் மட்டுமே எருதுவிடும் விழா நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்கப்படும். அனுமதி அளித்தப்பின் விதிகளை மீறும் பட்சத்தில் விழாக்குழுவினர் மீது கிரிமினல் குற்றப்பிரிவின் கீழ் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story