ராயக்கோட்டை அருகே 500 காளைகள் பங்கேற்ற எருது விடும் விழா


ராயக்கோட்டை அருகே 500 காளைகள் பங்கேற்ற எருது விடும் விழா
x
தினத்தந்தி 10 Feb 2019 4:30 AM IST (Updated: 9 Feb 2019 11:23 PM IST)
t-max-icont-min-icon

ராயக்கோட்டை அருகே நல்லராலப்பள்ளியில் 500 காளைகள் பங்கேற்ற எருது விடும் விழா நடந்தது. இதில் காளைகள் முட்டி 10 பேர் காயம் அடைந்தனர்.

ராயக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகே உள்ள நல்லராலப்பள்ளி கிராமத்தில் நேற்று எருது விடும் விழா நடந்தது. இதில் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட காளைகள் அழைத்து வரப்பட்டன. தொடர்ந்து மைதானத்தில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

அப்போது மாடுகள் மைதானத்தில் துள்ளி குதித்தும், சீறிப்பாய்ந்தும் சென்றன. அங்கு கூடியிருந்த ஆர்வமிக்க இளைஞர்களும், மாடுபிடி வீரர்களும் காளைகளை பின் தொடர்ந்து விரட்டி சென்றனர். மேலும் சிலர் மாடுகளின் கொம்புகளில் கட்டப்பட்டிருந்த வண்ண பதாகைகளையும், பரிசு பொருட்களையும் பறித்தனர். அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்கள் கோஷங்கள் எழுப்பி ஆரவாரம் செய்தனர்.

இந்த நிலையில் காளைகள் முட்டி தள்ளியதில் விழாவை காண வந்த இளைஞர்கள் 10 பேர் காயம் அடைந்தனர். இந்த எருதுவிடும் விழாவை காண ஓசூர் தேன்கனிக்கோட்டை, தளி, கெலமங்கலம் சூளகிரி, உத்தனப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும், கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக் கணக்கான பொதுமக்கள் வந்திருந்தனர்.

காயமடைந்தவர்களுக்கு முதலுதவி அளிக்கும் வகையில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. அதேபோல பாதுகாப்பிற்காக ராயக்கோட்டை போலீசார் ஏராளமானோர் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர்.

இந்த எருது விடும் விழாவையொட்டி ஆங்காங்கே அன்னதானம் மற்றும் நீர், மோர் வழங்கப்பட்டது.

Next Story