ரூ.396 கோடி மதிப்பீட்டில் 3 நீர்ப்பாசன திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்தும் பணி தொடக்கம் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேட்டி


ரூ.396 கோடி மதிப்பீட்டில் 3 நீர்ப்பாசன திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்தும் பணி தொடக்கம் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேட்டி
x
தினத்தந்தி 9 Feb 2019 10:45 PM GMT (Updated: 9 Feb 2019 5:59 PM GMT)

தர்மபுரி மாவட்டத்தில் ரூ.396 கோடி திட்ட மதிப்பீட்டில் 3 நீர்ப்பாசன திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.

தர்மபுரி,

தர்மபுரியில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக அரசு தர்மபுரி மாவட்ட மக்கள் மீது தனி கவனம் செலுத்தி அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. 2001- 2006 ஆம் ஆண்டுகளில் தமிழக அரசு கிருஷ்ணகிரி அணையின் வலதுபுற கால்வாய் நீட்டித்தல் திட்டத்தின் மூலம் திண்டல் ஏரிக்கு தண்ணீர் கொண்டுவரும் திட்டத்தை ரூ.7 கோடியே 6 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தியது. இதன் மூலம் 34 ஏரிகள் தண்ணீர் வசதி பெற்றுள்ளது. இதே காலகட்டத்தில் பென்னாகரம் அருகே உள்ள மத்தளப்பள்ளம் என்ற இடத்தில் ரூ.14 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் அணை ஒன்றும் புதிதாக கட்டப்பட்டு உள்ளது.

கடந்த 2011-ம் ஆண்டு செங்கண்பசுவத்தலாவ் ஏரியிலிருந்து கொண்டசாமன ஏரி வரை தண்ணீர் கொண்டுவரும் திட்டத்திற்காக ரூ.16 கோடியே 70 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நிறைவடைந்து 11 ஏரிகள் தண்ணீர் வசதியை பெற்றுள்ளன. தர்மபுரி மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு எண்ணேகொல்புதூர் அணைக்கட்டிலிருந்து தும்பலஅள்ளி அணைக்கு தண்ணீர் கொண்டுவரும் நீர்ப்பாசன திட்டம், அலியாளம் அணையில் இருந்து தூள்செட்டி ஏரிக்கு தண்ணீர் கொண்டுவரும் திட்டம், ஜெர்தலாவ் 5000 மீட்டர் தூர கால்வாயிலிருந்து புலிக்கரை ஏரிக்கு தண்ணீர் கொண்டுவரும் திட்டம் ஆகியவற்றை செயல்படுத்த நிலம் கையகப்படுத்துவதற்கு கடந்த 1-ந்தேதி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

எண்ணேகொல்புதூர் அணைக்கட்டிலிருந்து தும்பலஅள்ளி அணைக்கு தண்ணீர் கொண்டுவரும் திட்டத்தின் மூலம் 21 ஏரிகள் 16 தடுப்பணைகள் பயன்பெறும். இந்த திட்டத்திற்கான திட்ட மதிப்பீடு ரூ.276 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அலியாளம் அணையில் இருந்து தூள்செட்டி ஏரிக்கு ரூ.67 கோடி திட்ட மதிப்பீட்டில் தண்ணீர் கொண்டு வரும் திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த ஏரிகளும், தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த தூள்செட்டி ஏரியும் இந்த திட்டத்தில் பயன்பெறும்.

ஜெர்தலாவ் 5000 மீட்டர் தூர கால்வாயிலிருந்து புலிக்கரை ஏரிக்கு தண்ணீர் கொண்டு வர திட்ட மதிப்பீடு ரூ.53 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரூ.396 கோடி மதிப்பீட்டில் 3 நீர்ப்பாசன திட்டங்களையும் செயல்படுத்த திட்டமிட்டு அதற்கு தேவையான நிலங்களை கையகப்படுத்தும் பணிகள் தொடங்கி உள்ளன. தர்மபுரி மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை பெருக்கும் வகையில் நீர்ப்பாசன திட்டங்களை அறிவித்து ஆணையிட்டுள்ள தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு தர்மபுரி மாவட்ட மக்களின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.

Next Story