கச்சிராயப்பாளையம் பகுதியில் பெண்களை கட்டிப்போட்டு கொள்ளையடித்த 3 பேர் சிக்கினர்


கச்சிராயப்பாளையம் பகுதியில் பெண்களை கட்டிப்போட்டு கொள்ளையடித்த 3 பேர் சிக்கினர்
x
தினத்தந்தி 10 Feb 2019 3:00 AM IST (Updated: 10 Feb 2019 12:06 AM IST)
t-max-icont-min-icon

கச்சிராயப்பாளையம் பகுதியில் பெண்களை கட்டிப்போட்டு நகை-பணத்தை கொள்ளையடித்த வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கச்சிராயப்பாளையம்,

கச்சிராயப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி, சின்னசேலம் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் ஆகியோர் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் மாலை அக்கராயப்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்து கொண்டிருந்தனர்.

இதை பார்த்த போலீசார், அந்த மோட்டார் சைக்கிளை மறித்து, அதில் வந்தவர்களிடம் விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் 3 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள், சங்கராபுரம் அருகே உள்ள பொருவளூரை சேர்ந்த குப்பன் மகன் கிரி (வயது 32), மரக்காணம் அருகே பிரம்மதேசம் பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் மோகன்(34), அரியந்தாங்கலை சேர்ந்த அமாவாசை மகன் பாலாஜி(29) என்பதும், கச்சிராயப்பாளையம் பகுதியில் தனித்தனி சம்பவத்தில் பெண்களை கட்டிப்போட்டு கொள்ளையடித்த வழக்கில் தொடர்புடையவர்கள் என்பதும் தெரியவந்தது.

தொடர்ந்து நடத்திய விசாரணையில், சின்னசேலம் அருகே உள்ள வாணியந்தலை சேர்ந்தவர் வேலு மகன் சத்தியராஜ்(வயது 30), டிரைவர். இவர் கள்ளக்குறிச்சி அடுத்த நல்லாத்தூர் கிராம எல்லையில் பங்களாவுடன் கூடிய விளை நிலத்தை குத்தகைக்கு எடுத்து, அங்கு தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். கடந்த டிசம்பர் மாதம் சத்தியராஜ் வேலைக்கு சென்றதும், வீட்டில் அவரது மனைவி நிறைமாத கர்ப்பிணியான சுகுணா(26), தாய் கண்ணகி(40), தங்கை தனலட்சுமி(25) ஆகியோர் இருந்தனர்.

அப்போது நள்ளிரவில் கிரி, மோகன் உள்ளிட்ட 7 பேர் 2 மோட்டார் சைக்கிள்களில் சத்தியராஜ் வீட்டுக்கு சென்று கண்ணகி, தனலட்சுமி, சுகுணா ஆகியோரை தாக்கி, அவர்களை கயிற்றால் கட்டிப்போட்டுள்ளனர். பின்னர் அவர்கள் 5 பவுன் நகை, ரூ.50 ஆயிரம், பென்டிரைவ், மெமரிகார்டு ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றுள்ளனர்.

மேலும் கடந்த மாதம் 27-ந் தேதி கச்சிராயப்பாளையம் அடுத்த சிவகங்கை கிராமத்தை சேர்ந்த செம்மலை(45) என்பவரது வீட்டுக்குள் புகுந்து, அங்கிருந்த செம்மலையின் மனைவி செல்வி(40), மகள் செவந்தி(17), தாய் அங்கம்மாள் ஆகியோரை கயிற்றால் கட்டிப்போட்டு, 1¼ பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரத்தை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றதும் தெரியவந்தது.

அவர்களிடம் இருந்து அரிவாள், ஒரு பவுன் நகை, செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான மோகன், பாலாஜி ஆகியோர் மீது மரக்காணம், பிரம்மதேசம் போலீஸ் நிலையங்களில் வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது. இவர்கள் 2 பேருக்கும் கிரிக்கும் இடையே கடலூர் மத்திய சிறையில் இருக்கும் போது பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பழக்கத்தின் அடிப்படையிலேயே அவர்கள் கச்சிராயப்பாளையம் பகுதியில் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story