ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி 17-ந்தேதி 126 ஜோடிகளுக்கு இலவச திருமணம் தஞ்சை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. தீர்மானம்


ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி 17-ந்தேதி 126 ஜோடிகளுக்கு இலவச திருமணம் தஞ்சை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. தீர்மானம்
x
தினத்தந்தி 10 Feb 2019 4:30 AM IST (Updated: 10 Feb 2019 12:57 AM IST)
t-max-icont-min-icon

ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி தஞ்சை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வருகிற 17-ந்தேதி 126 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

தஞ்சாவூர்,

தஞ்சை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் தஞ்சையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட பொருளாளர் மகாலிங்கம் தலைமை தாங்கினார். இணை செயலாளர்கள் சாவித்திரிகோபால், ருக்மணிகிருஷ்ணன், பொன்.முத்துவேல், பகுதி செயலாளர்கள் அறிவுடைநம்பி, சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கீழவாசல் பகுதி செயலாளர் ரமேஷ் வரவேற்றார். கூட்டத்தில் தஞ்சை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், துணை ஒருங்கிணைப்பாளருமான வைத்திலிங்கம் எம்.பி., வடக்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான துரைக்கண்ணு, எம்.எல்.ஏ.க்கள் சேகர், கோவிந்தராஜன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை ஏழை, எளிய மக்கள், மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவது. நடைபெற உள்ள தஞ்சை நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பூத் கமிட்டியை ஒரு வாரத்துக்குள் அமைத்து, அ.தி.மு.க. வேட்பாளரை அதிக வாக்குவித்தியாசத்தில் வெற்றி பெற செய்வது.

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழ்வாதார உதவி வழங்கி, புதிதாக வீடு கட்டிக்கொடுக்க ஆணையிட்ட தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பது. பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில் பொங்கல் பரிசு சிறப்பு தொகுப்புடன் ரூ.1000 வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பது. தஞ்சை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா சிலை அமைத்து கொடுத்ததற்கு நன்றி தெரிவிப்பது. இதே போல் ஒன்றியம், நகரம், பேரூர் பகுதிகளிலும் உரிய அனுமதி பெற்று சிலை அமைப்பது.

ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு வருகிற 17-ந்தேதி ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்த 126 ஜோடிகளுக்கு இலவச திருமணத்தை நடத்தி வைப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மத்திய கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் துரை.திருஞானம், பால்வள தலைவர் காந்தி, மகளிரணி செயலாளர் அமுதாரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் துரை.வீரணன், சாமிவேல், சத்தியமூர்த்தி, துரை.செந்தில், கோவி.தனபால், ரவிச்சந்திரன், துரைமாணிக்கம், சுப்பிரமணியன், பட்டுக்கோடை நகர செயலாளர் சுப.ராஜேந்திரன், வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி தலைவர் வைத்திலிங்கம், ஒப்பந்தக்காரர் பிரசாத் மற்றும் பிரிவு நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் கோட்டை பகுதி செயலாளர் புண்ணியமூர்த்தி நன்றி கூறினார்.

பின்னர் அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் எம்.பி. நிருபர்களிடம் கூறுகையில், “ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தை எதிர்த்து அப்பல்லோ நிர்வாகம் ஏன் கோர்ட்டுக்கு சென்றது என்று தெரியவில்லை. இது குறித்து கோர்ட்டு தான் முடிவு செய்யும். விரக்தியின் விளிம்பால் தமிழக அரசின் பட்ஜெட் குறித்து டி.டி.வி.தினகரன் குறை கூறுகிறார். அவருக்கு நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள். பொதுக்குழு உறுப்பினர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் எங்களிடம் தான் உள்ளனர். எனவே இரட்டை இலை சின்னமும் எங்களிடம் தான் இருக்கும்”என்றார்.

Next Story