சாலை விதிகளை மீறுவோரை கண்டறிய செங்கல்பட்டு-திருச்சி சாலையில் கண்காணிப்பு கேமரா அமைச்சர் தகவல்


சாலை விதிகளை மீறுவோரை கண்டறிய செங்கல்பட்டு-திருச்சி சாலையில் கண்காணிப்பு கேமரா அமைச்சர் தகவல்
x
தினத்தந்தி 9 Feb 2019 11:15 PM GMT (Updated: 9 Feb 2019 7:57 PM GMT)

சாலை விதிகளை மீறுவோரை கண்டறிய செங்கல்பட்டு-திருச்சி வரையிலான சாலையில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட உள்ளது என அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.

கரூர்,

கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் சார்பில் அட்லஸ் கலையரங்கத்தில் 30-வது சாலை பாதுகாப்பு வாரவிழா நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் கலந்து கொண்டு, சாலை விதிகள் குறித்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நடத்தப்பட்ட ஓவியம், பேச்சு, கட்டுரை உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசும், 10 ஆண்டுகளுக்கும் மேலாக விபத்தில்லாமல் அரசு பஸ்களை இயக்கிய ஓட்டுனர்களுக்கு நினைவு பரிசும் வழங்கி பாராட்டினார்.

இதைத்தொடர்ந்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசியதாவது:-

இந்தியாவில் ஆண்டொன்றுக்கு கிட்டத்தட்ட 15 லட்சம் பேர் விபத்துகளில் உயிரிழப்பதாகவும், தமிழகத்தில் 17 ஆயிரம் பேர் உயிரிழப்பதாகவும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

அதிலும் மாணவ, மாணவிகள் ஓட்டி வரக்கூடிய இருசக்கர வாகனகள் தான் 40 சதவீதம் விபத்துக்குள்ளாகின்றன. தொழில்வளர்ச்சி உள்ளிட்டவற்றின் காரணமாக தமிழகத்தில் 2 கோடி வாகனங்கள் சாலையில் இயங்கி கொண்டிருக்கின்றன. எனவே விபத்துகளை தடுக்க தொழில்நுட்ப ரீதியாகவும், விழிப்புணர்வு ஏற்படுத்தியும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

சாலை விபத்துகளை குறைப்பதற்காகவும், சாலை விதிகளை கடைபிடிப்பதற்காகவும் தமிழகத்தில் 30 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு ஒரு போக்குவரத்து ஆய்வாளர் நியமிக்கப்பட்டுள்ளார்கள். சாலை விதிகளை கடைபிடிப்பதற்காகவும், சாலை பாதுகாப்பை அதிகரிக்கவும், முதல்-அமைச்சர் சாலை பாதுகாப்பு நிதியை ரூ.20 கோடியிலிருந்து, ரூ.65 கோடியாக உயர்த்தி வழங்கி உள்ளார்.

இதில் கரூர் மாவட்டத்திற்கு ரூ.6 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் விபத்து நடக்கும் இடங்கள் கண்டறியப்பட்டு 10 உயர் மின் கோபுரவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் சென்னை - திருச்சி சாலையில் செங்கல்பட்டு முதல் திருச்சி வரை ரூ.25 கோடியில் தானியங்கி போக்குவரத்து கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு, அதன்மூலம் சாலை விதிகளை மீறுவோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க பணிகள் நடைபெற்று வருகிறது. அடுத்த கட்டமாக 5 பெரிய சாலைகள் இத்திட்டத்தின் கீழ் கண்காணிக்கப்பட உள்ளது.

எனவே விபத்தில்லா தமிழகத்தை உருவாக்க அனைவரும் முன்வர வேண்டும். இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழகத்தில் கரூர் மாவட்டத்தில் தான் ரூ.39 லட்சத்து 72 ஆயிரம் மதிப்பில் முற்றிலும் கணினிமயமாக்கப்பட்ட ஓட்டுனர் உரிமம் தேர்வுதளம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த கணினிமயமாக்கப்பட்ட ஓட்டுனர் உரிமம் தேர்வுதளம் மேலும் 13 இடங்களில் அமைக்கப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story