காஞ்சீபுரம் அருகே மணல் கடத்தல்; 6 பேர் கைது


காஞ்சீபுரம் அருகே மணல் கடத்தல்; 6 பேர் கைது
x
தினத்தந்தி 9 Feb 2019 10:00 PM GMT (Updated: 9 Feb 2019 7:59 PM GMT)

காஞ்சீபுரம் அருகே மணல் கடத்தல் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் அருகே கோளிவாக்கம், மேட்டுக்குப்பம் போன்ற பகுதிகளில் மாட்டு வண்டிகளில் மணல் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதையொட்டி, காஞ்சீபுரம் தாலுகா சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன், பாலுச்செட்டிசத்திரம் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி ஆகியோர் அந்தந்த பகுதிகளுக்கு விரைந்தனர். அப்போது மணல் கடத்தியது தெரிந்தது.

இதையொட்டி, கோளிவாக்கத்தை சேர்ந்த தயாளன் (வயது 39), சித்திரை (60) கீழம்பி காலனியை சேர்ந்த சுப்பிரமணி (55) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் காஞ்சீபுரம் அருகே ஓரிக்கை பகுதியில் இருசக்கர வாகனத்தில் மணல் கடத்தியதாக ஓரிக்கையை சேர்ந்த நவீன்குமார் (21) என்பவரை காஞ்சீபுரம் தாலுகா போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு கொசஸ்தலை ஆற்றில் இருந்து சரக்கு ஆட்டோவில் மணல் கடத்துவதாக பள்ளிப்பட்டு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் தியாகராஜன் ஆற்று மேம்பாலம் அருகே காத்திருந்தார்.

அப்போது அந்த வழியாக பதிவு எண் இல்லாத புதிய சரக்கு ஆட்டோ வந்தது. அதை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் மணல் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. ஆட்டோவை ஓட்டிவந்த பள்ளிப்பட்டு அருகே படுதலம் கிராமத்தை சேர்ந்த கஜா என்கிற கஜேந்திரன் (26) என்பவரை போலீசார் கைது செய்து மணல் கடத்தி வந்த புதிய சரக்கு ஆட்டோவை கைப்பற்றினர்.

கும்மிடிப்பூண்டியை அடுத்த பாதிரிவேடு அருகே உள்ள போந்தவாக்கத்தில் சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து தலைமையில் பாதிரிவேடு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டரை போலீசார் மடக்கி பிடித்து சோதனை செய்தனர்.

மேற்கண்ட டிராக்டரில் ஆந்திராவில் இருந்து மணல் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து பாதிரிவேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து ஆந்திர மாநிலம் காளகஸ்தியை சேர்ந்த டிராக்டர் டிரைவர் சிட்டிபள்ளி ரவி (30) என்பவரை கைது செய்தனர். மேலும் மணலுடன் டிராக்டரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Next Story