கூட்டணி பற்றி பா.ஜ.க.வுடன் பேசவில்லை தம்பிதுரை பேட்டி


கூட்டணி பற்றி பா.ஜ.க.வுடன் பேசவில்லை தம்பிதுரை பேட்டி
x
தினத்தந்தி 9 Feb 2019 11:00 PM GMT (Updated: 9 Feb 2019 8:05 PM GMT)

தேர்தல் கூட்டணி பற்றி பா.ஜ.க.விடம் பேசவில்லை என்று தம்பிதுரை கூறினார்.

மணப்பாறை,

திருச்சி மாவட்டம், மணப்பாறை ஒன்றியத்தில் உள்ள கருப்பூர், புத்தாநத்தம், பண்ணப்பட்டி உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை சென்று மக்களிடம் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அவருடன் பல்வேறு துறைகளின் அதிகாரிகளும் சென்றனர். இந்நிலையில் கருத்தகோடங்கிப்பட்டியில் நிருபர்களுக்கு, தம்பிதுரை பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

கடந்த தேர்தல்களில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா சிறிய கட்சிகளுடன் கூட்டணி வைத்திருந்தார். ஆனால் தேசிய கட்சிகளுடன் கூட்டணி வைக்கவில்லை. இன்று நாட்டில் தேசிய கட்சிகளே கிடையாது. பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எல்லாம் சில மாநிலங்களில் ஆட்சி செய்கின்றன. இதனால் எல்லாம் மாநில கட்சிகளாகத்தான் இருந்து கொண்டிருக்கின்றன.

தேசிய கட்சிகளுடன் கூட்டணி தேவை இல்லை என்பது ஜெயலலிதாவின் கருத்தாக இருந்தது. ஜெயலலிதாவின் வழியில் செயல்படுவோம் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார். மேலும் தமிழ்நாட்டிற்கு யார் நல்லது செய்கிறார்களோ? அவர்களுடன் தான் கூட்டணி என்றும் கூறியிருக்கிறார். எனவே தமிழ்நாட்டிற்கு யார் நல்லது செய்கிறார்கள், என்ன உறுதிமொழி தருகிறார்கள் என்பதை பார்த்து முடிவு செய்வோம். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் கூட்டணி பற்றி பார்த்துக் கொள்ளலாம்.

அ.தி.மு.க., பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தால் எனது நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்று கேட்கிறீர்கள், அத்தைக்கு மீசை முளைத்தால் தான் சித்தப்பா என்பார்கள். கூட்டணி குறித்து இதுவரை பா.ஜ.க.விடம் பேசவே இல்லை. நாங்கள் முதலில் பா.ஜ.க.வின் கூட்டணியி லேயே இல்லை. 50 எம்.பி.க்களுடன் அ.தி.மு.க. பலம் பொருந்திய கட்சியாக உள்ளது. மத்திய-மாநில அரசுகளின் உறவு நன்றாக இருக்கிறது.

தமிழகத்தில் பா.ஜ.க. தலைவர்கள், திராவிட கட்சிகளை வளர விட மாட்டோம் என்று கூறு கிறார்கள். இதனால் தேசியக் கட்சி என்று சொல்லிக் கொள்ளும் கட்சிகளை நாங்கள் எப்படி தமிழகத்தில் வர விடுவோம். பா.ஜ.க., தி.மு.க.வுடன் தொடர்பு வைத்துக் கொண்டு எங்களை பழிவாங்கிக் கொண்டிருக்கிறது.

எங்களை விமர்சிப்ப தால் நான் பா.ஜ.க.வை விமர்சிக்கிறேன். தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 பாராளு மன்ற தொகுதி களிலும் வெற்றி பெறுகிற அனைத்து தகுதியும் அ.தி.மு.க.விற்கு உண்டு.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story