தனியார் பஸ்-சரக்கு வேன் மோதல்; டிரைவர் பலி


தனியார் பஸ்-சரக்கு வேன் மோதல்; டிரைவர் பலி
x
தினத்தந்தி 10 Feb 2019 4:15 AM IST (Updated: 10 Feb 2019 2:14 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டையில் தனியார் பஸ்சும், சரக்கு வேனும் மோதிக்கொண்ட விபத்தில் சரக்கு வேன் டிரைவர் பரிதாபமாக இறந்தார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம், வடகாட்டில் இருந்து தனியார் பஸ் ஒன்று நேற்று காலையில் பயணிகளை ஏற்றிக்கொண்டு புதுக்கோட்டைக்கு வந்து கொண்டிருந்தது. இந்த தனியார் பஸ் புதுக்கோட்டை அருகே உள்ள அசோக்நகரில் உள்ள அ.தி.மு.க. மாவட்ட கட்சி அலுவலகம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே புதுக்கோட்டையில் இருந்து அறந்தாங்கிக்கு சரக்கு வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது.

சரக்கு வேனை அறந்தாங்கி பகுதியை சேர்ந்த அந்தோணி (45) என்பவர் ஓட்டினார். இந்நிலையில் எதிர்பாராதவிதமாக சரக்கு வேனும், தனியார் பஸ்சும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் சரக்கு வேனின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது. இதனால் புதுக்கோட்டை-அறந்தாங்கி சாலையில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

இந்த விபத்தில் சரக்கு வேன் டிரைவர் அந்தோணி படுகாயமடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம், பக்கத்தினர் இது குறித்து கணேஷ்நகர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்தோணியை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அந்தோணி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்த புகாரின் பேரில் கணேஷ்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story