பால்கரில் நிலநடுக்கத்தில் பலியான சிறுமி குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் முதல்-மந்திரி பட்னாவிஸ் வழங்கினார்


பால்கரில் நிலநடுக்கத்தில் பலியான சிறுமி குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் முதல்-மந்திரி பட்னாவிஸ் வழங்கினார்
x
தினத்தந்தி 10 Feb 2019 4:30 AM IST (Updated: 10 Feb 2019 3:44 AM IST)
t-max-icont-min-icon

பால்கரில் நிலநடுக்கத்துக்கு பலியான சிறுமி குடும்பத்துக்கு முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ரூ.4 லட்சம் வழங்கினார்.

மும்பை,

மும்பையையொட்டி உள்ள பால்கர் மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களாக அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இதில் கடந்த சில நாட்களுக்கு முன் ஒரே நாளில் 6 முறை நிலஅதிர்வு ஏற்பட்டது. அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்படுவதால் அங்கு வசித்து வரும் மக்கள் பீதியில் உறைந்து உள்ளனர்.

அங்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அபாயகரமான கட்டிடங்களில் உள்ள மக்கள் திறந்தவெளி கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

இந்தநிலையில் நிலநடுக்கம் ஏற்பட்டு வரும் பால்கருக்கு முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் சென்றார். அங்கு நிலநடுக்க முன்எச்சரிக்கை நடவடிக்கை குறித்து அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

கடந்த 1-ந் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது, ரமேஷ் என்பவரின் 2 வயது மகள் வைபவி சுவரில் மோதி பரிதாபமாக உயிரிழந்தாள். அவளது குடும்பத்துக்கு முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்கினார். பின்னர் அவர் நிபர்களிடம் கூறியதாவது:-

அச்சத்தில் உள்ள மக்களுக்கு விழிப்புணர்வு முகாம் நடத்தப்படும். இங்குள்ள பழமையான கட்டிடங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும். பால்கர் நிலஅதிர்வு குறித்து மும்பை ஐ.ஐ.டி., டெல்லி நில அதிர்வியல் தேசிய மையத்தினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story