திருப்பூரில், குடும்பத்தகராறில் தலைமை சிறைகாவலர் தூக்குப்போட்டு தற்கொலை
திருப்பூரில் குடும்பத்தகராறில் தலைமை சிறைகாவலர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
நல்லூர்,
மதுரை மாவட்டம் அரசரடி பகுதியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (வயது 43). இவர் கடந்த 21 வருடங்களாக போலீஸ்காரராக பணியில் இருந்து வந்தார். கடந்த வருடம் மே மாதம் 21–ந்தேதி திருப்பூர் மாவட்ட சிறைக்கு மாற்றப்பட்டு திருப்பூர் குமரன் ரோடு கோர்ட்டு வளாகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட சிறையில் முதல் தலைமை சிறை காவலராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் திருப்பூர், காங்கேயம் ரோடு நல்லிகவுண்டன் பஸ் நிறுத்தம் திருநகரில் செயல்பட்டு வரும் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவலர் குடியிருப்புகள் கட்டிடத்தில் இவருக்கு ஒதுக்கப்பட்ட வீட்டில் தனியாக வசித்து வந்தார். விடுப்பில் மதுரைக்கு சென்ற ஜெயபிரகாஷ் தனது மனைவி, மகன், மகளை பார்த்து விட்டு கடந்த 6–ந்தேதி சொந்த ஊரான மதுரையில் இருந்து புறப்பட்டு இரவு பணிக்கு சென்றுள்ளார். 7–ந்தேதி காலை பணி முடிந்து வீட்டிற்கு சென்ற அவர் பணிக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது.
நேற்று மதியம் 1 மணியளவில் ஆயுதப்படை வளாகத்தில் காவலர் குடியிருப்பு வளாகத்தில் துர்நாற்றம் வீசியதால் அருகில் இருந்தவர்கள் சந்தேகமடைந்து இதுகுறித்து ஊரக போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த ஊரக போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் செல்லத்துரை மற்றும் போலீசார் குடியிருப்புக்கு சென்று துர்நாற்றம் வீசிய வீட்டிற்கு சென்று கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அங்கு ஜன்னல் கம்பியில் நைலான் கயிறு மூலம் ஜெயபிரகாஷ் தூக்குப்போட்டு அழுகிய நிலையில் பிணமாக தொங்கி உள்ளார்
போலீசார் ஜெயபிரகாஷ் உடலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்கு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் விசாரணையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் அடிக்கடி குடும்பத்தில் பிரச்சினை எழுந்துள்ளதாக தெரிகிறது. அதனால் மனமுடைந்து கடிதம் எழுதி வைத்து விட்டு மதுகுடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஜெயபிரகாஷ் எழுதிய கடிதத்தில் குடும்பத்தகராறு காரணமாக தற்கொலை செய்துகொள்வதாக எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும் இதுகுறித்த தகவல் அவரது குடும்பத்தாருக்கு தெரிவிக்கப்பட்டது. மதுரையில் இருந்து மனைவி மற்றும் மகன், மகள் ஆகியோர் புறப்பட்டு வந்தனர். இதுகுறித்து ஊரக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.