கோடை காலத்தில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய கணிப்பாய்வு அலுவலர் ஆய்வு
ராமநாதபுரம் மாவட்டத்தில் கோடை காலத்தில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் சந்திரமோகன் ஆய்வு செய்தார்.
பரமக்குடி,
பரமக்குடி யூனியன் அலுவலக கூட்ட அரங்கில் ராமநாதபுரம் மாவட்ட கணிப்பாய்வு அலுவலரும், தமிழ்நாடு கைத்தறி மற்றும் கைவினை பொருட்கள் மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவர், மேலாண்மை இயக்குனருமான அரசு முதன்மை செயலர் சந்திரமோகன் கோடை காலத்தினை கருத்தில் கொண்டு பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ஏதுவாக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார். கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் சந்திரமோகன் கூறியதாவது:– ராமநாதபுரம் மாவட்டத்தில் எதிர்வரும் கோடை காலத்தினை கருத்தில் கொண்டு பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ஏதுவாக புதிய குடிநீர் ஆதாரங்கள் ஏற்படுத்துவதற்கு உரிய சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ள உள்ளாட்சி அமைப்புகளை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுஉள்ளது.
இதன்படி மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.80 லட்சம் மதிப்பில் 10 புதிய பணிகளும், பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.42 லட்சம் மதிப்பில் 3 புதிய பணிகளும், ஊராட்சி நிர்வாகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.848 லட்சம் மதிப்பில் 175 புதிய பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.
இந்த பணிகள் அனைத்தையும் முறையே இம்மாத இறுதிக்குள் நிர்வாக அனுமதி பெற்று கால தாமதமின்றி ஒப்பந்தப்புள்ளி கோரும் பணிகளை நிறைவேற்றி மார்ச் மாத இறுதிக்குள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கோடைகாலத்தில் தண்ணீரின் அளவு சற்று குறையலாம் என கணக்கிடப்பட்டுள்ளது. இதனை ஈடு செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேபோல குடிநீர் வினியோக குழாய்களில் ஏற்படும் உடைப்புகளை உடனுக்குடன் சரிசெய்யவும், முறைகேடான குடிநீர் இணைப்புகள் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுஉள்ளது. இதுதவிர தெருவிளக்கு வசதி, சாலை வசதி, குப்பை மற்றும் கழிவுகளை மேலாண்மை செய்வதற்கான திடக்கழிவு மேலாண்மை திட்ட செயல்பாடு ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்தி பணியாற்ற அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அதனை தொடர்ந்து கணிப்பாய்வு அலுவலர் சந்திரமோகன், மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் ஆகியோர் பரமக்குடி நகரம், சந்தைப்பேட்டை பகுதியிலும், பரமக்குடி யூனியன் சூடியூர் கிராமத்திலும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் குடிநீர் வினியோக திட்டப்பணிகள் குறித்து நேரில் ஆய்வு செய்தனர். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஹெட்சி லீமா அமலினி, பரமக்குடி சப்–கலெக்டர் விஷ்ணுசந்திரன், வேளாண்மைத்துறை இணை இயக்குனர் சுசிலா, ஊராட்சிகளின் உதவி இயக்குனர் கேசவதாசன், அனைத்து நகராட்சி ஆணையாளர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.