அரக்கோணத்தில் பயிற்சி நிறைவு விழா: பயங்கரவாத அச்சுறுத்தல்களை துணிச்சலுடன் எதிர்கொண்டு முறியடிக்க வேண்டும் மத்திய உள்துறை இணை மந்திரி கிரண்ரிஜிஜூ பேச்சு


அரக்கோணத்தில் பயிற்சி நிறைவு விழா: பயங்கரவாத அச்சுறுத்தல்களை துணிச்சலுடன் எதிர்கொண்டு முறியடிக்க வேண்டும் மத்திய உள்துறை இணை மந்திரி கிரண்ரிஜிஜூ பேச்சு
x
தினத்தந்தி 10 Feb 2019 10:45 PM GMT (Updated: 10 Feb 2019 2:57 PM GMT)

பயங்கரவாதம் மற்றும் நக்சலைட்டுகளின் அச்சுறுத்தல்களை துணிச்சலுடன் எதிர்கொண்டு முறியடிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை இணை மந்திரி கிரண்ரிஜிஜூ பேசினார்.

அரக்கோணம், 

வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே தக்கோலத்தை அடுத்த நகரிகுப்பத்தில் மத்திய அரசுக்கு சொந்தமான மத்திய தொழில் பாதுகாப்பு படை பயிற்சி மையம் உள்ளது. இந்த மையத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தேர்வு செய்யப்படும் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு பயிற்சியை நிறைவு செய்த 105 பெண்கள் உள்பட 1,100 துணை உதவி ஆய்வாளர்களுக்கு பயிற்சி நிறைவு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு டி.ஜி.பி. ராஜேஷ்ரஞ்சன் தலைமை தாங்கினார்.

சிறப்பு அழைப்பாளராக மத்திய உள்துறை இணை மந்திரி கிரண் ரிஜிஜூ கலந்து கொண்டு திறந்த ஜீப்பில் சென்று வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டார். பின்னர் வெளிபிரிவில் அஷீதோஷ்பிரதாப்சிங், உள்பிரிவில் சோனியா ராவத், துப்பாக்கி சுடுதலில் நகுல் மற்றும் அனைத்து பிரிவு பயிற்சியில் சிறந்த விளங்கிய நீலம் பாடிட்டர் உள்ளிட்ட வீரர்களுக்கு சான்றிதழ், கோப்பை வழங்கினார்.

அத தொடர்ந்து அவர் பேசியதாவது:–

நாட்டில் எத்தனையோ பணிகள் இருக்கும் வேளையில் உங்களை நாட்டின் பாதுகாப்பு பணிக்கு அனுப்பி வைத்த உங்களின் பெற்றோரை பாராட்டுகிறேன். இங்கு உடற்பயிற்சி, துப்பாக்கி சுடுதல், பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கிய மக்களை எவ்வாறு காப்பாற்றுவது என்பது உள்ளிட்ட பல்வேறு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது.

விமான நிலையங்கள், துறைமுகம், மெட்ரோ ரெயில் நிலையம், அனல்மின் நிலையம், ஏவுதள மையம், அதிசயங்கள் ஆகியவற்றில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படும்போது நீங்கள் பெற்ற பயிற்சியை செயல்படுத்தி நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும்.

பயங்கரவாதம், நக்சலைட்டுகளின் அச்சுறுத்தல்களை துணிச்சலுடன் எதிர்கொண்டு அதை முறியடிக்க வேண்டும். பணியின்போது வீரர்கள் தனித்திறமைகளை வெளிப்படுத்தி வெற்றி பெற வேண்டும். நாட்டின் பாதுகாப்பு பணியில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களின் பங்கு மிகவும் முக்கியமானதாகும். வீரர்களின் சாகசங்கள் மெய்சிலிர்க்கும் வகையில் உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

நாட்டில் உள்ள விமான நிலையங்கள் உள்பட 350 இடங்களில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் ஒரு லட்சத்து 55 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். மத்திய தொழில் பாதுகாப்பு படையில் பெண்கள் அதிகளவில் சேர்ந்து பணியாற்றி வருகின்றனர். ஆகவே பெண்களுக்கு கூடுதல் இடம் ஒதுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

காஷ்மீர், ஜம்மு–காஷ்மீர் பகுதியில் உள்ள விமான நிலையங்களில் பாதுகாப்பு பணியில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் ஈடுபடுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கிய மக்களை எப்படி காப்பாற்றுவது, பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கிய கட்டிடங்களில் சிக்கிய மக்களை காப்பாற்றுவது, குண்டுகளை செயலிழக்க வைப்பது, நவீனரக துப்பாக்கிகளை எவ்வாறு கையாள்வது என்பதை வீரர்களை செய்து காட்டிய செயல்முறை ஒத்திகை நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

விழாவில் மத்திய தொழில் பாதுகாப்பு படை ஐ.ஜி. எம்.ஆர்.நாயக், டி.ஐ.ஜி. வினய்காஜ்லா, வேலூர் மாவட்ட கலெக்டர் ராமன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார், ராணிப்பேட்டை உதவி கலெக்டர் இளம்பகவத், அரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு எஸ்.கே.துரைப்பாண்டியன், ஐ.என்.எஸ்.ராஜாளி, தேசிய பேரிடர் மீட்பு படை, மத்திய தொழில் பாதுகாப்பு படை உயர் அதிகாரிகள், வீரர்கள், பெற்றோர்கள், பாரதீய ஜனதா கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story